தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாக்களில் டி.சுப்புலாபுரம், சக்கம்பட்டி, கொப்பையம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவற்றில் டி.சுப்புலாபுரம் கிராமத்தில் மட்டும் ஏறக்குறைய ஆயிரத்து 500 விசைத்தறி கூடங்களில் சேலைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு சுங்கடி, செட்டிநாடு, பேப்பர் காட்டன் உள்ளிட்ட பல்வேறு ரக காட்டன் சேலைகள் நெசவு செய்யப்படுகின்றன. இந்தப் பகுதிகளில் உற்பத்தியாகும் சேலைகள் தரம் நேர்த்தியாக இருப்பதால் தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் ஏற்றுமதியாகின்றன.
ஊரங்கால் ரூ. 3 கோடி மதிப்பு சேலைகள் தேக்கம் கரோனா நோய் பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு தடை உத்தரவால் ஜவுளி உற்பத்தி முற்றிலும் பாதிப்படைந்தது. மேலும், கையிருப்பு மூலப்பொருட்களை வைத்து நெசவு செய்யப்பட்ட சேலைகளும் விற்பனைக்கு அனுப்பப்படாமல் தேக்கமடைந்துள்ளன. இதனால் பல கோடி ரூபாய் அளவிலான வர்த்தகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து டி.சுப்புலாபுரம் பகுதி ஜவுளி உற்பத்தியாளர்கள் கூறும்போது, "ஊரடங்கு தளர்வு ஏற்பட்ட பிறகும் ஜவுளி விற்பனை மந்தமாகவே உள்ளது. இதனால் மொத்த வியாபாரிகள் சேலைகள் கொள்முதல் செய்வதில் ஆர்வம் காட்டுவதில்லை.
ஊரடங்கு காலத்தில் வருமானம் இல்லாத நிலையிலும் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்திடும் வகையில் கையிருப்பு மூலப்பொருட்களை வைத்து சேலைகள் உற்பத்தி செய்து வந்தோம். ஆனால் 60 நாட்களுக்கு மேலாக நீடித்த பொது முடக்கத்தால் உற்பத்தி செய்த சேலைகள் தொடர்ந்து விற்பனைக்கு அனுப்ப முடியவில்லை.
இதனால் ஏறக்குறைய 3 கோடி ரூபாய் அளவிலான சேலைகள் தேக்கமடைந்துள்ளன. எனவே ஜவுளி உற்பத்தியாளர்களின் துயர் துடைத்திட மத்திய, மாநில அரசுகள் மானிய விலையில் நூல்கள் வழங்க வேண்டும், ஜி.எஸ்.டி வரி செலுத்துவதில் 3 மாத கால அவகாசம் அளித்திட வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.
நெசவாளர்களின் வாழ்வாதாரம் காத்திட தமிழ்நாடு முதலமைச்சர் ஆவணம் செய்து மானிய விலையில் நூல்கள் வழங்க வேண்டும். இல்லையென்றால் தறிகள் அனைத்தும் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டு பலரின் வேலை வாய்ப்பு பறிபோகும் சூழல் உருவாகும் என்றனர்.