தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம், திருச்சி ப்ரொபெல்லர் டெக்னாலஜி என்கிற அமைப்புடன் சேர்ந்து ’சஃபிகோ’ எனும் பல்வகை பணிகளை செய்யக்கூடிய ரோபோக்களை உருவாக்கி வருகிறது. கரோனா நோயால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெறும் நோயாளிகளுக்கு, மருத்துவப் பணியாளர்கள் அருகில் சென்று பொருட்களை வழங்குவதற்கு பதிலாக, 32 கிலோ எடை கொண்ட இந்த ரோபோக்களால் வழங்க முடியும்.
15 கிலோ அளவிற்கு உணவு, மருந்துகள், தண்ணீர் உள்ளிட்ட பொருட்களை சுமார் ஒன்றரை கி.மீ தூரம் வரை சென்று வழங்குவதற்கு ஏதுவாக இந்த ரோபோக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தலா ரூ.1லட்சம் மதிப்பில் உருவாகும் இந்த வகை ரோபோக்களை தஞ்சை, திருச்சி மற்றும் மதுரை அரசு மருத்துவமனைகளுக்கு இப்பல்கலைக்கழகம் வழங்கியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் 3 ரோபோக்களை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் முன்னிலையில் மருத்துவக் கல்லூரி முதல்வர் இளங்கோவனிடம் பல்கலைக்கழக நிர்வாகிகள் வழங்கினர்.
அரசு மருத்துவக்கல்லூரிக்கு ரோபோக்கள் வழங்கிய சாஸ்த்ரா பல்கலைக்கழகம்! மருத்துவர்களும், செவிலியர்களும் கூட தாங்கள் சொல்ல விரும்பும் விஷயங்களை வாய்மொழியாக சொன்னால், இந்த ரோபோக்களைக் கொண்டு அச்செய்தியை நோயாளிகளிடம் கொண்டுச் சேர்க்க முடியும். தஞ்சை, திருச்சி, மதுரை, தேனியைத் தொடர்ந்து சேலம் மற்றும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைகளுக்கும் ரோபோக்கள் வழங்கப்பட உள்ளதாக சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தேனியில் கரோனா தடுப்புப் பணிகள் - ஓபிஎஸ் ஆலோசனை!