தேனி மாவட்டம் கூடலூரில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவரத்தை ஒட்டியுள்ளது சுரங்கனாறு நீர்வீழ்ச்சி. இந்த நீர்வீழ்ச்சியிலிருந்து வரும் தண்ணீரானது கூடலூர் ஒட்டான்குளம் வந்து சேர்கிறது. இந்தக் குளத்தில் தேக்கப்படுகிற தண்ணீரால் ஈஸ்வரன்கோவில்புலம், பாரவந்தான், ஒழுகுவழி பகுதிகளில் உள்ள சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் இரு போக நெல் சாகுபடி நடைபெறுவதுடன், இப்பகுதி கால்நடைகளுக்கு குடிநீராகவும் பயன்பட்டு வருகிறது.
இந்நிலையில் கேரள சுற்றுலா வளர்ச்சிக் கழகம், சுற்றுலா மேம்பாடு என்ற பெயரில் நீர்வீழ்ச்சிக்கு வரும் தண்ணீரை தேக்க கேரளப் பகுதியான அருவிக் குழியில் தடுப்பணை அமைத்துள்ளது. அதில் கால்மிதி படகு (பெடல்போட்) விட்டு வருமானம் பெருக்க முடிவு செய்துள்ளது. இப்பகுதியில் தடுப்பணை அமைந்தால், கூடலூர் ஒட்டான்குளத்து நீரை நம்பியுள்ள நெல் விவசாயம் கேள்விக்குறியாகும் அபாயம் உள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகள் தடுப்பணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.