தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கள இயக்குநர்கள் நியமனம் இல்லை: தமிழ்நாட்டில் புலிகள் காப்பகங்களுக்கு பாதுகாப்பு இல்லையா? - வேட்டையாடுதல் அதிகரிக்கும் அபாயம்

தமிழ்நாட்டில் உள்ள புலிகள் காப்பகங்களுக்கு புலிகள் மற்றும் மற்ற வன உயினங்களை பாதுகாக்கும் வகையில் கள இயக்குநர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் வனவிலங்குகளை வேட்டையாடுதல் சம்பவங்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

தமிழகத்தின் புலிகள் காப்பகங்களில் கள இயக்குனர்கள் இல்லை; வேட்டையாடுதல் அதிகரிக்கும் அபாயம்
தமிழகத்தின் புலிகள் காப்பகங்களில் கள இயக்குனர்கள் இல்லை; வேட்டையாடுதல் அதிகரிக்கும் அபாயம்

By

Published : Jul 7, 2022, 5:13 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள புலிகள் காப்பகங்களுக்கு புலிகள் மற்றும் மற்ற வன உயிரினங்களை பாதுகாக்கும் வகையில் கள இயக்குநர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் வனவிலங்குகளை வேட்டையாடுதல் மற்றும் மரங்களை கடத்துதல் அதிகரிக்கக் கூடும் என அச்சமடைந்த வன விலங்கு ஆர்வலர்கள் வனத்துறை உடனே தேவையான புலிகள் காப்பகங்களுக்கு கள இயக்குநர்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

முதுமலை, ஆனைமலை, சத்தியமங்கலம், களக்காடு - முண்டந்துறை மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை என தமிழ்நாட்டில் ஐந்து புலிகள் காப்பகங்கள் உள்ளன. இவற்றில் சத்தியமங்கலம், களக்காடு - முண்டந்துறை மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை ஆகிய மூன்று காப்பகங்களுக்கு தமிழ்நாடு வனத்துறை கடந்த ஆறு மாதம், ஒரு வருட காலமாக கள இயக்குநர்கள் நியமிக்கவில்லை.

கள இயக்குநர்கள் நியமனம் இல்லை

மேலும் தென் தமிழ்நாட்டில் மதுரை, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி மற்றும் களக்காடு வனப்பகுதிகளை ஒன்றாக இணைத்து ஒரே ஒரு வன அதிகாரியை கள இயக்குநராகவும் வனப்பாதுகாவலராகவும் நியமித்துள்ளனர். இதனால் வன விலங்குகளை எப்படி பாதுகாக்க முடியும் என ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் இயக்கம் மாநில ஒருங்கிணைப்பாளர் விஜய் கிருஷ்ணராஜ்,தேசிய புலிகள் பாதுகாப்பு மையத்தின் விதிப்படி, ஒரு புலிகள் காப்பகத்திற்கு ஒரு கள இயக்குநரை பணி நியமனம் செய்ய வேண்டும் என்பது கட்டாயம். இல்லையெனில் நிர்வாகம் பாதிக்கப்பட்டு காப்பகங்களில் உள்ள உயிரினங்களை பாதுகாக்க இயலாது. தமிழ்நாட்டில் புலிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ள நிலையில், காப்பகங்களுக்கு அதிகாரிகளை நியமனம் செய்வது அவசியம்.

மேலும் வனத்துறையில் அதிகாரிகள் கணிசமான அளவில் உள்ள நிலையில், வனத்துறைக்கு புலிகள் காப்பகங்களில் அதிகாரிகளை நியமிப்பதில் என்ன தயக்கம். புலிகள் மற்றும் வன உயிரினங்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றார்.

வனவிலங்கு ஆராய்ச்சியாளர் கொ. அசோக சக்கரவர்த்தி,காடுகளில் புலிகள் வாழ்ந்தால் தான் நாடு வளரும் என்று சொல்வார்கள். வனப்பகுதிகளில் உணவுச் சங்கிலி சமநிலையில் உள்ளதற்கு முக்கிய காரணமாக அமைந்த விலங்கு புலி. புலிகள் ஒரு காட்டின் ஆரோக்கியத்தை நிர்ணயிக்கிறது. மேலும் காடுகளின் பல்லுயிர் பெருக்கத்தை சமநிலைப்படுத்துகிறது.

தமிழ்நாட்டில் பொறுத்தமட்டில் ஐந்து புலிகள் காப்பகங்கள் உள்ளன. புலிகளின் எண்ணிக்கையும் ஆரோக்கியமாக உள்ளது. புலிகளை கண்காணிக்க கள இயக்குநர்களை நியமிப்பது அவசியமான ஒன்றாகும். இல்லையெனில் புலிகளை வேட்டையாடுதல் அதிகரிக்கக்கூடும். ஒரு கால கட்டத்தில் இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை சரிந்த நிலையில், சமீப ஆண்டுகளில் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றார்.

தமிழ்நாடு முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் சையது முசாமில் அப்பாஸ்,கள இயக்குநர்கள் இல்லாத புலிகள் காப்பகங்களுக்கு மற்ற காப்பகங்களில் உள்ள வன அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். இருப்பினும் கூடிய விரைவில் கள இயக்குநர்கள் நியமிக்கப்படுவார்கள். தமிழ்நாட்டில் 2006 ஆம் ஆண்டில் 76 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை, 2010 இல் 163 ஆகவும், 2014 இல் 229 ஆகவும் உயர்ந்தது. இது 2019 ஆம் ஆண்டு புலிகளின் கணக்கெடுப்பின் போது 264 ஆக எண்ணிக்கை உயர்ந்துள்ளது என்றார்.

இதையும் படிங்க:இரட்டை இலை சின்னத்தை முடக்க கோரி மனு கொடுத்தவருக்கு அபராதம்

ABOUT THE AUTHOR

...view details