பெரியகுளம் அருகேயுள்ள வடுகபட்டியைச் சேர்ந்த குருசாமி என்பவரது மகன் ஆறுமுகம். இந்திய ராணுவத்தில் 18 ஆண்டுகளாக பணியாற்றி வரும் இவர், இன்னும் 3 மாதங்களில் பணி ஓய்வு பெற உள்ளார். தற்போது நாயக் எனும் பதவியில் இருக்கும் ஆறுமுகம், ஜம்மு–காஷ்மீரில் உள்ள பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். இவருடன் சேர்த்து 10 வீரர்கள் அங்கு தங்கியிருந்தனர்.
இந்நிலையில், 3 நாட்களுக்கு முன் ஆறுமுகம் தங்கியிருந்த முகாமில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் பலத்த தீக்காயமடைந்த அவர், ஜம்முவில் உள்ள ராணுவ மருத்துவனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் நேற்று உயிரிழந்ததாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.