கேரள மாநிலம் தேக்கடியில் அமைந்துள்ளது முல்லைப் பெரியாறு அணை. அடர்ந்த வனப்பகுதியில் உள்ள முல்லைப் பெரியாறு அணைக்கு வல்லக்கடவு பகுதியிலிருந்து வனப்பகுதி வழியாக மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வந்தன. கடந்த 2000ஆம் ஆண்டு இப்பகுதி வழியாக சென்ற உயர் அழுத்த மின் கம்பி உரசியதில் காட்டு யானை ஒன்று இறந்தது.
இதன் காரணமாக கடந்த 2000ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி அன்று முல்லைப் பெரியாறு அணைக்குச் சென்ற மின் இணைப்பை கேரள மின்வாரியம் துண்டித்தது. அன்று முதல் பெரியாறு அணைப்பகுதியில் சோலார் மின் விளக்குகள் மற்றும் ஒளி குறைவான ஜெனரேட்டர் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அதற்கு மாற்று ஏற்பாடாகவும் வன விலங்குகளுக்கு இடையூறு ஏற்படாத வகையிலும், மின் கம்பிகளை வனப்பகுதியில் தரை வழியாக கொண்டு செல்ல தமிழ்நாடு பொதுப்பணித்துறை கேரள அரசிடம் அனுமதி கேட்டது. அதற்கான செலவுத் தொகையாக ரூபாய் 1 கோடியே 66 லட்சத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாடு அரசு கேரள மின்வாரியத்திற்கு செலுத்தியது. ஆனால் கேரள வனத்துறை அனுமதி தராததால் பணிகள் காலதாமதமாகி வந்தது.