தேனி :கேரள மாநிலம் மூணாறு பகுதியில் அட்டகாசம் செய்து வந்த அரிசிகொம்பன் யானையை, கடந்த சில நாட்களுக்கு முன்பு மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர், கும்கி யானையின் உதவியுடன் தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள பெரியார் புலிகள் வனசரணாலய பகுதியில் கொண்டு வந்து விட்டனர்.
வனபகுதியில் யானையை விடும் முன் அதன் கழுத்தில் ஜிபிஆர்எஸ் கருவியை பொருத்தி விட்ட வனத்துறையினர், தொடர்ந்து யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். பெரியார் வனசரணாலய பகுதியில் விடப்பட்ட காட்டு யானை, அங்கிருந்து பல கிலோ மீட்டர் தூரம் கடந்து தமிழக வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்தது.
தொடர்ந்து ஹவேவிஸ் மேகமலை பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளர்களை அச்சுறுத்தி வந்த நிலையில், ரோஜா பூ கண்டம் வழியாக லோயர் கேம்ப் பகுதிக்கு இடம் பெயர்ந்தது. கூடலூர் அருகே கழுதை மேட்டுப்பகுதியில் உள்ள தனியார் தென்னந்தோப்பில் புகுந்து விவசாய பயிர்களை அழித்து அங்கேயே தஞ்சம் அடைந்து நின்றது.
இதனைப் பார்த்த அப்பகுதி விவசாயிகள் வனத்துறை மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலினை அறிந்து விரைந்து வந்த தமிழக கேரளா வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர், யானை நடமாட்டம் காணப்படும் பகுதியில் பொதுமக்களையும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களையும் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர். மேலும் அங்கு பணியில் இருந்த பணியாளர்களை வெளியேற்றி யானையின் செயல்பாட்டினை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.