தேனி ஐயப்பன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் தேனி: தேனி அருகே உள்ள வெங்கடாசலபுரத்தில் அருள்மிகு ஶ்ரீ அனுக்கிரஹ சுவாமி ஐயப்பன் திருக்கோயில் புதிதாக கட்டப்பட்டுள்ள நிலையில், அதன் கும்பாபிஷேக விழா நேற்று (செப்.3) வெகு விமர்சையாக நடைபெற்றது. அதையடுத்து, ஐயப்பனுக்கு நடைபெற்ற நெய் அபிஷேகம் நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்து ஐயப்பனை வணங்கிச் சென்றனர்.
முன்னதாக கோயில் எதிரே யாகசாலை அமைக்கப்பட்டு யாக குண்டத்தில் வேதாச்சாரியார்களால் நெய் உள்ளிட்ட சிறப்பு பொருட்களைக் கொண்டு யாகம் வளர்க்கப்பட்டது. பின்னர் புனித கலச நீர் அடங்கிய குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வேதாச்சாரியார்கள் புனித கலச நீரை தலையில் சுமந்து கொண்டு செல்லும் கடம் புறப்பாடு நிகழ்ச்சி தொடங்கியது.
புனித கலச நீரை வேதாச்சாரியார்கள் தலையில் சுமந்து கொண்டு கோயிலை சுற்றி வலம் வந்து பின்னர் விமான கலசத்தை அடைந்தனர். அதையடுத்து, மூன்று விமான கலசங்களுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மேள தாளங்கள் முழங்க கலச நீர் ஊற்றி அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. தொடர்ந்து கலசங்களுக்கு கற்பூர தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்கள் மீது புனித கலச நீரானது தெளிக்கபட்டது.
அதைத்தொடர்ந்து, கோயில் மூலவரான ஐயப்ப சுவாமிக்கு சந்தனம், தேன் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடைபெற்று, புனித கலச நீர் ஊற்றி கற்பூர தீபாராதனை காட்டப்பட்டது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேக நிகழ்ச்சியை கண்டு களித்து சுவாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க:ராணிப்பேட்டையில் 36 வருடங்களுக்கு பிறகு சந்தித்த பள்ளி மாணவர்கள்- ஆசிரியர் தின விழா கொண்டாடி மகிழ்வு!