தேனி மாவட்டம் சின்னமனூர் ஆர்.சி.பள்ளித்தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி பாண்டியன். இவர் 2010ஆம் ஆண்டு கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தங்கமுத்து என்பவரது மகள் சௌந்திராவை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்நிலையில் திருமணமான நாளிலிருந்தே கருப்பசாமி பாண்டியன் தனது மனைவியிடம் வரதட்சணை கேட்டு வற்புறுத்திவந்துள்ளார். இதனால் கணவன், மனைவிக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் பொறுமையிழந்த சௌந்திரா தனது தந்தையின் வீட்டிற்குச் சென்றுவிட்டார். இதையடுத்து, கருப்பசாமி பாண்டியன் தனது மாமனார் வீட்டுக்கு வந்து இனிமேல் வரதட்சணை கேட்டு தகராறு செய்யமாட்டேன் என உறுதியளித்து சௌந்திராவை சமாதானம் செய்து மீண்டும் சின்னமனூருக்கு அழைத்து வந்துள்ளார்.
இந்நிலையில், வீட்டிற்கு வந்த பத்தாவது நாளில் (2011 மார்ச் 2) சௌந்திரா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக அவரின் தந்தைக்கு கருப்பசாமி பாண்டியன் தகவல் கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த தங்கமுத்து அங்குசென்று தனது மகளின் சடலத்தைப் பார்த்து கதறி அழுதுள்ளார்.
ஆயுள் தண்டனை வழங்கி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு இதையடுத்து, தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி சின்னமனூர் காவல் நிலையத்தில் தங்கமுத்து புகார் அளித்தார். இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் கருப்பசாமியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த நிலையில் நேற்று விசாரணை முடிவடைந்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில், குற்றம்சாட்டப்பட்ட கருப்பசாமி பாண்டியனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி கீதா தீர்ப்பு வழங்கினார். இதனையடுத்து குற்றவாளி கருப்பசாமி பாண்டியனை தகுந்த பாதுகாப்புடன் மதுரை மத்திய சிறைக்கு காவல் துறையினர் அழைத்துச்சென்றனர்.