கேரள மாநிலம் தேக்கடியில் அமைந்துள்ளது முல்லை பெரியாறு அணை. தமிழ்நாட்டின் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாகத் திகழ்கிறது.
கடந்த 2014ஆம் ஆண்டு அணையின் நீர்மட்டத்தை 142 உயர்த்திக் கொள்ள உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், அணையை கண்காணித்து பராமரிக்க மூவர் குழுவை நியமித்தது. இந்த மூவர் குழுவிற்கு உதவியாக ஐந்து பேர் கொண்ட துணை கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டது. இந்த துணை குழுவின் தலைவராக தற்போது மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சரவணக்குமார் உள்ளார்.
அந்த குழுவில் தமிழ்நாட்டின் பிரதிநிதிகளாக பெரியாறு அணை சிறப்பு கோட்ட செயற்பொறியாளர் சாம் இர்வின், உதவி செயற்பொறியாளர் குமார், கேரள பிரதிநிதிகளாக கேரள நீர்ப்பாசனத் துறை செயற்பொறியாளர் பினுபேபி, உதவி பொறியாளர் பிரசீத் ஆகியோர் உள்ளனர். கடந்த ஜூன் 25ஆம் தேதி அணையின் நீர்மட்டம் 112.40 அடியாக இருந்த போது துணை குழுவினர் முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு செய்தனர்.