தேனி தொகுதியில் அதிகம் பணம் பட்டுவாடா செய்யப்படும் பகுதி என்ற பெயர் ஒருபக்கம், மறுபக்கம் பட்டுவாடா செய்யப்படவிருந்த பணம் பறிமுதல் செய்ய நடந்த துப்பாக்கிச் சூடு என தேர்தல் களேபரத்துடன் காட்சியளிக்கிறது. இந்நிலையில், திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் ஓபிஎஸ் தனது அதிகாரத்தை பயன்படுத்தி மகனை வெற்றி பெற வைக்க வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணப்பட்டுவாடா செய்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து, கூட்டணி கட்சியினர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது பேசிய திமுக தேனி மாவட்ட பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன், 'துணை முதல்வர் ஓபிஎஸ் வாக்காளர்களுக்கு சேலைகள், பரிசுப் பொருட்கள் மற்றும் 1000, 2000 என பணத்தை தாராளமாக வாரி வழங்குகிறார். தேர்தல் ஆணையம் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஓபிஎஸ் மகன் தோற்றுவிடுவார் என தெரிந்து வாக்குப்பதிவின்போது மாலை 3 மணிக்கு மேல் 500 குண்டர்களை வைத்து வாக்குச்சாவடிகளை முற்றுகையிட்டு, முகவர், அதிகாரிகளை மிரட்டி அவர்கள் இஷ்டத்திற்கு ஓட்டுப்போட திட்டமிட்டுள்ளனர். இந்த தகவல் நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து எனக்கு கிடைத்துள்ளது.