உலக நாடுகளை சிறைப்பிடித்து வைத்திருக்கும் கரோனா வைரஸ் இந்தியாவையும் முடக்கி இருக்கிறது. இந்த அபாயகரமான தொற்றிலிருந்து மக்கள் தங்களை காத்துக்கொள்ள மத்திய அரசு 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது.
இதன் மூலம் அனைத்து வர்த்தகம், கல்வி நிறுவனங்கள், வழிபாடு மற்றும் சுற்றுலாத் தலங்கள் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மத்திய அரசிடம் நிவாரண நிதி கோரியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து வர்த்தகர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் தங்களது பங்களிப்பை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கி வருகின்றனர். இந்நிலையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெய பிரதீப் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கியுள்ளார்.
மேலும் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இதுவும் கடந்து போகும் என்ற உலக நீதியின்படி எல்லா சோதனைகளும் சிறிது காலமே என்ற நடைமுறைக்கு ஏற்ப எல்லாம்வல்ல இறைவனின் அருளால் இந்தக் கரோனா நோயிலிருந்து உலக மக்கள் அனைவரும் குணமடைந்து தமிழ்நாடு, இந்தியா மற்றும் உலக நாடுகள் அனைத்தும் நல்ல நிலைக்கு வருவதற்கு கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பெரம்பலூரில் மாஸ்க் அணிந்து ரேசன் பொருள்கள் வாங்கிச்சென்ற மக்கள்!