தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 6, 2020, 11:44 AM IST

Updated : Jan 6, 2020, 1:37 PM IST

ETV Bharat / state

காற்றாலை கழிவுகளால் நோய்த் தொற்று அபாயம் - பொதுமக்கள் குற்றச்சாட்டு

தேனி: ஆண்டிபட்டி அருகே காற்றாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாமல் விளைநிலங்களுக்கு அருகாமையில் கொட்டிச் சென்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

காற்றாலை கழிவுகளால் பொதுமக்கள் பாதிப்பு
காற்றாலை கழிவுகளால் பொதுமக்கள் பாதிப்பு

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள திருமலாபுரம் - அம்மச்சியாபுரம் சாலையில் நந்தீஸ்வரன் கோயில் எதிரே உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் காற்றாலைக் கழிவுகள் கொட்டப்பட்டு மலைபோல் குவிந்து கிடக்கிறது. இவைகளில் நெகிழிப் பைகள், சோடா உள்ளிட்ட ரசாயனக் கழிவுகள், உபகரணக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள், ஆலைக் கழிவுகள் என உயிருக்கு தீங்கு விளைவிப்பவைகளே அதிகளவில் காணப்படுகின்றன.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இதேபோல் இப்பகுதியில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டன. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து மருத்துவக் கழிவுகள் அப்பகுதியில் கொட்டப்படுவது நிறுத்தப்பட்டது. தற்போது காற்றாலைக் கழிவுகளை சிலர் இரவோடு இரவாக வந்து இங்கு கொட்டி வருவதால், இப்பகுதியில் சுற்றுச்சூழல், நிலத்தடி நீர் உள்ளிட்டவை பாதிப்படைந்துள்ளது.

காற்றாலை கழிவுகளால் பொதுமக்கள் பாதிப்பு

இது குறித்து ஈடிவி பாரத் செய்தி ஊடகத்திற்குப் பேட்டியளித்த விவசாயிகள், 'தற்போது காற்றாலைக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ள இடமானது, பல வருடங்களுக்கு முன்னர் கண்மாயாக இருந்ததாகவும், காலப்போக்கில் நீர்வழிப்பாதையில் ஏற்பட்ட ஆக்கிரமிப்புகளால் கண்மாய் காணாமல் போய், கழிவுகளின் கூடாரமாக மாறியதாகவும் தெரிவிக்கின்றனர். காற்றாலைக் கழிவுகள் எளிதில் தீப்பற்றக்கூடியதாலும், இதிலுள்ள எண்ணெய்க் கழிவுகள் மண்ணில் கலப்பதால் நிலத்தடி நீர் மாசுபடுவதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும், இப்பகுதியில் மேய்ச்சலுக்குச் செல்லும் கால்நடைகள் கழிவுகளை உண்டு உயிரிழக்க நேரிடுகிறது என்றும் புகார் தெரிவிக்கின்றனர். இதன் மீது மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: காணொலி கலந்தாய்வு மூலம் காவல் நிலையங்களை திறந்துவைத்த முதலமைச்சர்!

Last Updated : Jan 6, 2020, 1:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details