தேனி: பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரத்தில் தேனி வனக்கோட்டத்திற்கு உட்பட்ட சொர்க்கம் கோம்பை வனப்பகுதியில் நேற்று முன்தினம் வனத்துறையின் மூலம் அமைக்கப்பட்ட சோலார் மின்வேலியில் சிறுத்தை ஒன்று சிக்கி உயிருடன் இருப்பதாக அப்பகுதியில் உள்ள விவசாயிகள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
சோலார் மின்வெளியில் சிக்கி உள்ள சிறுத்தையை உதவி வனப்பாதுகாவலர் மகேந்திரன் மற்றும் வனப் பணியாளர்களுடன் உயிருடன் மீட்கும் முயற்சியில் ஈடுபடும் போது சிறுத்தை சோலார் கம்பி வேலியில் இருந்து தானாக தப்பியது. அப்போது உதவி வனப்பாதுகாவலர் மகேந்திரனின் கையை கடித்து தாக்கி விட்டு சிறுத்தை அருகே உள்ள வனப்பகுதிக்குள் தப்பி சென்று விட்டதாக வனத்துறை தெரிவித்தனர்.
இந்நிலையில் வனத்துறை அதிகாரியை தாக்கி தப்பி விட்டு சென்ற சிறுத்தை மீண்டும் பழுதடைந்த சோலார் மின்வேலியில் சிக்கிய நிலையில் நேற்று மாலை உயிரிழந்ததாக வனத்துறையினர் கூறினர். பின்னர் உயிரிழந்த சிறுத்தை புலியை கால்நடை மருத்துவர்களை வரவழைத்து அவசர அவசரமாக உயிரிழந்த சிறுத்தைக்கு பிரேத பரிசோதனை செய்து அதே பகுதியிலேயே புதைத்துள்ளனர்.
மேலும் வனத்துறை அதிகாரியை தாக்கிய சிறுத்தை மறுநாள் அதே பகுதியில் உயிரிழந்து இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் வனத்துறை அதிகாரியை சிறுத்தை தாக்கிய போதே வனத்துறை அதிகாரியை காப்பாற்றுவதற்காக வனத்துறை ஊழியர்களே சிறுத்தையை தாக்கியதில் சிறுத்தை உயிரிழந்துள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும் சிறுத்தை வனத்துறை அதிகாரியை தாக்கிய சம்பவத்தையும் செய்தியாளர்களிடம் தெரிவிக்காமல் மூடி மறைத்ததோடு, தற்போது சிறுத்தை உயிரிழந்த சம்பவத்தையும் அவசர அவசரமாக பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்துள்ளதும், வனத்துறை அதிகாரியை தாக்கி விட்டு தப்பி ஓடியது சிறுத்தை மீண்டும் அதே சோலார் மின் வேலியில் உயிரிழந்த சம்பவம் வன உயிரின ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
எனவே சிறுத்தையின் இறப்பில் உள்ள மர்மத்தை தேனி வனத்துறை அதிகாரி உரிய விசாரணை நடத்தி வனவிலங்குகளை காப்பாற்ற வேண்டும் என்பதே வன உயிரின ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க: கூடலூர் கிழக்கு முத்தாலம்மன் கோயில் திருவிழா - கோலாகலமாக நடந்த மாட்டுவண்டி பந்தையம்