தமிழ்நாடு அரசு சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பார்வை மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன வசதிகளுடன் கூடிய தொடுதிரை அலைபேசி இலவசமாக வழங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் அந்தந்த மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகங்கள் மூலம் பெறப்பட்டு விநியோகம் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பப் படிவம் வழங்குவதில் வீண் அலைக்கழிப்பு செய்யப்படுவதாக நேற்று(ஜன. 11) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
தேனி மாவட்ட அமைப்பு சாரா பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள், சுமார் 15க்கும் மேற்பட்டோர் சார்பில், அளிக்கப்பட்ட அந்தப் புகாரில், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் நாங்கள், சென்னை கிண்டியில் உள்ள அகில இந்திய பார்வையற்றோர் சங்கத்தின் சார்பாக நடத்தப்படும் வகுப்புகளை ஜூம், கூகுள் மீட் போன்ற இணையதள செயலி மூலம் பயிற்சி மேற்கொள்கிறோம். இத்தகைய வகுப்புகளில் பங்கேற்பதற்காகவே அரசால், இலவசமாக நவீன வசதிகளுடன் கூடிய தொடுதிரை அலைபேசிகள் வழங்கப்பட உள்ளன.
அரசின் இந்த அறிவிப்பு பிற மாவட்டங்களில் உரிய முறையில் மாற்றுத்திறனாளிகளுக்குச் சென்றடைகிறது. ஆனால், தேனியில் எந்தவொரு தகவலும் வழங்கப்படுவதில்லை. பக்கத்து மாவட்டங்களில் இருந்து கிடைக்கப்பெறும் தகவல்களைக் கேட்டு அறிய வேண்டிய சூழல் உள்ளது. அவ்வாறு தாமதமாக தகவல் கிடைத்தும் விண்ணப்பம் செய்வதற்கு அணுகினால் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் சரியான விளக்கம் மற்றும் பதில் தருவதில்லை. இதனால் வீண் அலைக்கழிப்பு செய்யப்படுவதால் மாற்றுத்திறனாளிகள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.