தேனி மாவட்டத்தில் 10 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த 12,500 வழக்குகளில் இறுதி அறிக்கை தாக்கல் - அஸ்ரா கார்க் தேனி: தென் மண்டல காவல் துறை தலைவர் அஸ்ரா கார்க் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார். பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர் கூறுகையில், “நடப்பாண்டில் மட்டும் தேனி மாவட்டத்தில் 4 கொலை வழக்குகள், 3 போக்சோ வழக்குகள் மற்றும் 9 வழிப்பறி வழக்குகளில் நீதிமன்ற விசாரணை முடிவில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் 56 கஞ்சா வழக்குகள் பதிந்து 139 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 22 நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 68 நபர்களிடம் நன்னடத்தை பிணையப் பத்திரம் பெறப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக 214 வழக்குகளில் சம்பந்தப்பட்ட கஞ்சா குற்றவாளிகளின் 379 வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீதான வழக்கை அரசு வாபஸ் பெற வேண்டும் - சு.வெங்கடேசன் எம்.பி.
தேனி மாவட்டத்தில், இந்த ஆண்டில் இதுவரை 16 கொலை வழக்குகள் பதிவாகி இருக்கிறது. அவற்றில் 13 கொலைகள் குடும்பத் தகராறு காரணமாக நிகழ்ந்துள்ளது. ரவுடி, பழிக்குப் பழி வாங்குதல், சாதி மத ரீதியிலான மோதல் போன்ற சம்பவங்களால் ஏதும் நிகழ்வதில்லை. கடந்தாண்டு ஜூலை மாதத்தில் இருந்து தேனி மாவட்டத்தில் சுமார் 10 வருடங்களாக நிலுவையில் இருந்த 12,500 வழக்குகளில் இறுதி அறிக்கை சம்பந்தப்பட்ட குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கஞ்சா ஒழிப்பு நடவடிக்கைக்காக பெரிய வியாபாரிகளை ஆந்திரா, ஒடிசா வரை சென்று நமது போலீசார் கைது செய்து ஓர் ஆண்டுக்கு மேல் பிணையில் வராத அளவிற்கு வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். கஞ்சா கடத்தலைத் தடுக்க தமிழக - கேரளா எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்படும். மாவட்டத்தில் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: Theni Student murder: தேனி அருகே பள்ளி மாணவன் படுகொலைக்கு காதல் காரணமா..? போலீசார் விசாரணை
தென் மண்டலத்தில் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு உரிய தண்டனை வாங்கிக் கொடுக்கும் நோக்கில் ஒவ்வொரு கொலை வழக்கையும் டிஎஸ்பி லெவல் அதிகாரிகள் மூன்று முறை விசாரணை நடத்துவார்கள். மேலும் அந்த வழக்கை எஸ்.பி., இரண்டு முறை விசாரணையும், ஆய்வும் செய்வார். அதன் பின்பு எஸ்.பி.யின் ஒப்புதலுக்கு பின்பே நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின்போது திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. அபினவ் குமார் மற்றும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்ரே உடனிருந்தனர்.
இதையும் படிங்க: பாலியல் தொல்லை கொடுத்த கணவரை முன்னாள் காதலனுடன் தீர்த்துக் கட்டிய மனைவி