பெரியகுளம் அருகே உள்ள 126.68 அடி உயரம் கொண்ட சோத்துப்பாறை அணைக்கு, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து நீர் வரத்து வருகின்றது. பெரியகுளம், தென்கரை, லட்சுமிபுரம், தாமரைக்குளம், வடுகப்பட்டி, ஜெயமங்கலம், குள்ளப்புரமா ஆகிய பகுதிகளில் உள்ள 1,825 ஏக்கர் பழைய ஆயக்கட்டு பகுதி மற்றும் 1,040 ஏக்கர் புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு சோத்துப்பாறை அணைதான் நீராதாரம்.
இந்நிலையில், பாசனம் மற்றும் பெரியகுளம் நகராட்சி குடிநீர் தேவைக்காக, 30 கனஅடி தண்ணீரை சோத்துப்பாறை அணையில் இருந்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று திறந்து வைத்தார். இன்று முதல் டிசம்பர் 15 ஆம் தேதி வரை 30 கன அடியும், டிசம்பர் 16 முதல் ஜனவரி 15 ஆம் தேதி வரை 27 கன அடியும், ஜனவரி 16 முதல் மார்ச் 15 ஆம் தேதி வரை 25 கன அடியும் என 141 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.