தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமடைந்து வருகின்றது. அதில், அகமலை, ஊரடி, ஊத்துக்காடு, உலக்குருட்டி உள்ளிட்ட மேற்குத்தொடச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையின் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 113அடியாக உள்ளது. அணையின் மொத்தக்கொள்ளளவின் நீர்மட்டம் 126 கனஅடி, அணையின் நீர் இருப்பு 57.50 மி.கன அடியாகும். இந்நிலையில், நீர்வரத்து 33 கன அடியாக உள்ள நிலையில் பெரியகுளம் பகுதி குடிநீர் தேவைக்காக 3 கன அடிநீர் வெளியேற்றப்படுகின்றன.