தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கடமலைகுண்டு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி செல்லப்பாண்டி (42). 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான இவருக்கு சித்ரா என்ற மனைவியும் மூன்று மகள்களும் உள்ளனர். தனது சொந்த ஊரான கடமலைக்குண்டில் வசித்துவந்த செல்லப்பாண்டி திடீரென கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு மாயமானார்.
இது குறித்து செல்லப்பாண்டியின் அண்ணன் ராமராஜ் விசாரித்தும் சித்ரா, செல்லப்பாண்டியின் மகாராஜன் முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்தனர்.
இதனால், ஏற்பட்ட சந்தேகத்தையடுத்து கடமலைக்குண்டு காவல் நிலையத்தில் ராமராஜ் புகார் அளித்தார். இதையடுத்து, சித்ரா, மகாராஜன் ஆகியோரிடம் விசாரணை மேற்கொள்ள காவல் துறையினர் முயற்சித்தனர். காவல் துறையினரின் விசாரணைக்குப் பயந்து மகாராஜன் தலைமறைவாகினார். பின்னர், மயிலாடும்பாறை கிராம நிர்வாக அலுவலரிடம் அவர் சரணடைந்தார்.
இதனிடையே, கிராம நிர்வாக அலுவலர், மகாராஜனை காவல் துறையினரிடம் ஒப்படைத்தார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தனது மகள் சித்ராவை செல்லப்பாண்டி தொடர்ந்து அடித்து துன்புறுத்திவந்ததால் கூலிப்படையினரை வைத்து கழுத்தை நெரித்துக் கொலைசெய்ததை மகாராஜன் ஒப்புக்கொண்டார். மேலும், அந்த உடலை எரித்து புதைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
மருமகனை கூலிப்படை வைத்து கொலைசெய்த மாமனார் இதனைத் தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி பண்ணைக்காடு என்ற இடத்தில் புதைக்கப்பட்டிருந்த செல்லப்பாண்டி உடல் தோண்டி எடுக்கப்பட்டது. மகாராஜன், கூலிப்படையைச் சேர்ந்த கிஷோர், அன்பு கணேஷ், செந்தில்குமார், நாகராஜ் ஆகியோரைக் காவல் துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள செல்லப்பாண்டியின் மைத்துனர் தெய்வேந்திரன், தினேஷ், சக்திவேல் ஆகியோரைக் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: உயிருக்கு போராடிய குட்டி குரங்கு - ஏக்கத்துடன் நின்ற தாய் குரங்கு!