தேனி: போடிநாயக்கனூரில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பெருமாள் கவுண்டன்பட்டி. பட்டுப்புழு வளர்ப்பு தொழிலில் முதன்மை பெற்று திகழும் இந்த கிராமத்தில் சுமார் 15க்கும் மேற்பட்ட, பட்டுப்புழு கூடு உற்பத்தியாளர்கள் பட்டுப்புழுக்கள் வளர்த்து பட்டுக் கூடுகள் உற்பத்தி செய்து வருகின்றனர்.
2 கோடி ரூபாய்க்கு மேல் லாபம்: பட்டுப்புழு உற்பத்திக்கு முக்கியமான மல்பெரி இலைகள் என்று அழைக்கப்படக்கூடிய முசுமுசுக்கை இலைகள் பயிரிடப்பட்டு, சுமார் 100 ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்யப்படுகிறது. பட்டுப்புழு கூடு உற்பத்தியில் ஆண்டிற்கு 2 கோடி ரூபாய்க்கு மேல் லாபம் ஈட்டி தரும் இக்கிராம விவசாயிகள், தற்பொழுது தேனி மாவட்ட துறை அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் உற்பத்தியிலும், லாபத்திலும் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர்.
1 முட்டையிலிருந்து 600 பட்டுப்புழுக்கள்:அரசு மானியம் பெற்ற அங்கீகரிக்கப்பட்ட பட்டுப்புழு விற்பனை கூடங்களில் இருந்து பெற்று வந்த பட்டுப்புழுக்கள் தரமற்றதாக, கூடு உற்பத்தி செய்யக்கூடிய நிலையில் இல்லாததால் பட்டுப்புழுக்கள் கூடு கட்டாமல் உள்ளன. மேலும் குறிப்பிட்ட கால அளவிற்குப் பின் நோய்வாய் பட்டு செத்து மடிவதால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.
அரசு அங்கீகாரம் பெற்ற விற்பனை மையத்தில் இருந்து பெறப்படும் பட்டுப்புழு முட்டை ஒன்றிலிருந்து வெளிப்படும் புழு, சுமார் 450 முதல் 600 முட்டைகளை இடும். இதனால் விவசாயிகள் தங்கள் விளைநிலத்தின் அளவைப் பொறுத்து 200 முதல் 300 வரை முட்டைகளை எடுத்து அதிலிருந்து வரக்கூடிய லட்சக்கணக்கான பட்டுப் புழுக்களுக்கு மல்பெரி இலைகளை உணவாக அளித்து வருகின்றனர்.
ஆறு நாட்களில் பட்டுக்கூடுகள்: சுமார் 12 நாட்களில் பட்டுப்புழு கூடு கட்டுவதற்கு உரிய பக்குவம் அடையும். பன்னிரண்டாவது நாளில் புழுக்கள் மீது வலைகள் வைக்கப்படுகிறது. அந்த வலைகள் மீது பட்டு புழுக்கள் ஏறி சுமார் ஆறு நாட்களில் பட்டுக்கூடுகளை உற்பத்தி செய்கிறது. பின்னர் ஓரிரு நாட்களில் புழுக்களை சுற்றி கூடுகள் நன்கு வளர்ந்ததும், அவைகள் முறையாக பராமரிக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இந்தப் பருவத்தில் சிறிது தாமதமானாலும் பட்டுப்புழுக்களுக்கு சிறகுகள் முளைத்து பட்டு பூச்சியாக மாறி, கூட்டை விட்டு வெளியே வந்து விடும். இதனால் பட்டுக்கூடுகள் சிதைந்து பயனற்றதாகி விடும் என்பதால் விற்பனை மையத்தில் இருந்து பெறப்பட்ட புழுக்கள் சுமார் 22 முதல் 24 நாட்கள் வரை கவனமாக பராமரிக்கப்படுகின்றன. அதனை அடுத்து பட்டுக்கூடுகள் உற்பத்தியானதும் அவை விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
ஒரு பட்டுப்புழு மூலம் ஒரு கிலோ பட்டு நூல்: ஒரு முட்டை மூலம் பெறப்படும் புழுக்களில் இருந்து, ஒரு கிலோ வீதம் பட்டுக்கூடுகள் பெறப்படுகின்றன. 24 நாட்கள் பட்டு புழு வளர்ப்பில், 200 முட்டைகள் வாங்கி வைத்தால், ஒரே மாதத்தில் இரண்டு லட்சம் வரை வருமானம் ஈட்ட முடியும் என்று விவசாயிகள் கூறினர். 2 கிராம் அளவுள்ள ஒரு பட்டுப்புழு மூலம் ஒரு கிலோ பட்டு நூல் வரை எடுக்கப்படும் என்றும் விவசாயிகள் கூறியுள்ளனர்.