நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தேனியில் இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இணைந்து பிணம் போன்று வேடமணிந்து, கழுத்தில் தூக்கு கயிற்றை மாட்டியவாறு நூதன முறையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேனி - மதுரை சாலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக வந்தவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினார்.
ஆனால் காவல் துறையினரின் தடுப்பையும் மீறி போராட்டக்காரர்கள் வந்ததால் காவல் துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
பின்னர் ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில், மாணவர்களின் மருத்துவர் கனவை நீர்த்து போகச் செய்யும் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.