தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவை, சட்டப்பேரவை இடைத்தேர்தலில் சில வாக்குச்சாவடி மையங்களில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாகவும், ஆகையால் குறிப்பிட்ட சில மையங்களில் மறு வாக்குப்பதிவு நடத்திடவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தேனி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பெரியகுளம், ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதிகளின் இரு வாக்குச்சாவடிகளில் மே19ஆம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
மறுவாக்குப்பதிவுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கிட அதிமுக கோரிக்கை - மறு வாக்குப்பதிவு
தேனி: மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ள இரு வாக்குச்சாவடிகளுக்கும் கூடுதல் பாதுகாப்பு வழங்கிட வலியுறுத்தி மாவட்ட வருவாய் அலுவலரிடம் அதிமுகவினர் மனு அளித்துள்ளனர்.
இந்நிலையில், மறு வாக்குப்பதிவு நடைபெறும் மையங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்று ஆண்டிபட்டி, பெரியகுளம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர்கள் லோகிராஜன், மயில்வேல் ஆகியோர் மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமியிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லோகிராஜன், “தேனி தொகுதியில் மறு வாக்குப்பதிவு நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு வரவேற்கத்தக்கது. ஆனால் இதனை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து எதிர்த்து வருகின்றனர். மேலும் மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ள இரு வாக்குச்சாவடிகளையும் திமுக, அமமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளது. ஆங்காங்கே பயங்கர ஆயுதங்களை பதுக்கி வைத்து பெறும் கலவரத்தை நிகழ்த்திடவும் அவர்கள் திட்டமிட்டுட்டிருப்பதாகத் தெரிகிறது. எனவே மறு வாக்குப்பதிவு நடைபெறும் மையங்களுக்கும், வேட்பாளர்களுக்கும் கூடுதல் பாதுகாப்பு வழங்கக்கோரி மனு அளித்துள்ளளோம்” என்றார்.