தேனி: மரங்களிலே மிக விலை உயர்ந்த மரங்களில் ஒன்றாக கருதபடுவது சந்தன மரம் ஆகும், அதாவது ஆப்பீள் பிளாக் வுட் மரத்திற்கு பிறகு அதிக விலையுள்ள மரமாக பார்க்கபடுவது இந்த சந்தன மரங்கள் ஆகும்.
உயர்தர வாசனை திரவியங்கள் தயாரிக்கவும், வாசனை ஆயில்கள் தயாரிக்கவும் சந்தன மரங்கள் பயன்படுகின்றது. இதன் மதிப்பு மிக அதிகம் என்பதாலும், சந்தன மரங்களுக்கு சந்தைகளில் பெரும் வரவேற்பு இருப்பதாலும், அதிகளவில் சந்தன மரங்கள் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான இடங்களில் வளர்க்கபட்டு வருகின்றன.
இதே காரணங்களினால் சந்தன மரங்களை குறி வைத்து கடத்துவது தொடர் கதையாகி வருகிறது. கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் சந்தன மரங்கள் எங்கெங்கு வளர்க்கபடுகிறது, அதன் வயது, இடம் , அது கண்காணிப்பில் உள்ளதா? என்பதை எல்லாம் நோட்டமிட்டு இயந்திரங்களின் உதவியுடன் சில நிமிடங்களில் மரங்களை வெட்டி கடத்தி சென்று விடுகின்றனர்.
இந்த சந்தன மரங்களை வெட்டி கடத்தும் கும்பலின் பார்வை சமீபகாலமாக தேனி மாவட்டம் பக்கம் திரும்பியுள்ளது. தேனி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக தனியாருக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஒரு சில மரங்களை மட்டும் வெட்டி கடத்தி வந்த கும்பலின் பார்வை சில ஆண்டுகளுக்கு முன்பு வனத்துறையினரின் அலுவலகத்திலேயே கை வைக்கும் அளவிற்கு சென்றுள்ளது.
ஆண்டிபட்டி மற்றும் வருசநாடு பகுதியில் உள்ள வனத்துறையினரின் அலுவலகத்தில் இருந்த சந்தன மரங்களையே அந்த கும்பல் இரவோடு இரவாக வெட்டி கடத்தி சென்றுள்ளது. இந்த நிலையில் இந்த கும்பலின் கைவரிசை மீண்டும் தனியாருக்கு சொந்தமான பட்டா நிலங்களில் வளர்க்கபடும் சந்தன மரங்களின் பக்கம் தற்போது திரும்பியுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் உள்ள தனசேகரன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் வளர்க்கபட்டு வந்த 80க்கும் மேற்பட்ட சந்தன மரங்களை மர்ம கும்பல் ஆள் இல்லாத நேரத்தை பயன்படுத்தி வெட்டி கடத்தியுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் கோம்பை பகுதியில் விவசாயம் செய்து வருபவர் தனசேகரன். இவருடைய நிலத்தின் வரப்பு பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட சந்தன மரங்கள் வளர்க்கப்பட்டு வந்தன. இதோடு அந்த நிலத்தின் அருகாமையில் உள்ள மற்றொரு நபரின் நிலத்தின் முழுவதிலும் நூற்றுக்கும் மேற்பட்ட சந்தன மரங்கள் வளர்க்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.