தேனி மாவட்டம் தேவாரம் அருகே சாக்குளத்து மெட்டு மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. தேவாரத்திலிருந்து டி.மேட்டுப்பட்டி வழியாக 12கி.மீ., தூரத்தில் கேரளாவை இணைக்ககூடிய இந்த மலைச் சாலையை அமைத்துத் தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக போராடி வருகின்றனர். ஆனால், சாக்குளத்து மெட்டு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் இருப்பதாகவும், வன விலங்குகள், நீரோடைகள் பாதிக்கப்படும் என்பதால் சாலை அமைப்பதற்கு வனத்துறை அனுமதி மறுத்து வருகிறது.
இந்நிலையில் கேரளாவை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர், தனது பட்டா நிலத்திற்கு செல்வதற்காக தமிழ்நாடு வனப்பகுதியில் புதிதாக பாதை அமைத்திருப்பதாக ஐந்து மாவட்ட பெரியாறு - வைகை பாசன விவசாயிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக இன்று (ஜன.26) கம்பம் பகுதியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் எஸ்.ஆர். தலைவர், “சாக்குளத்து மெட்டு காப்புகாட்டிற்குள் சர்வே எண் 87/1-ன் மேற்குப்பகுதி பொள்ளாச்சி ஆர்.வி.எஸ்.மாரிமுத்து என்பவருக்கும், கிழக்குப் பகுதி தமிழ்நாடு வனத் துறைக்கும் சொந்தமானதாக இருக்கிறது.
இதற்கு அடுத்து வரும் சர்வே எண் 17/1/ன் படி மேற்குப்பகுதி தமிழ்நாடு வனத் துறைக்கும் கிழக்குப்பகுதி அதே பொள்ளாச்சியைச் சேர்ந்த ஆர்.வி.எஸ் மாரிமுத்து என்பவருக்கும் சொந்தமானதாக இருக்கிறது. மேற்கண்ட இரு சர்வே எண்களிலும் இந்த சர்வே எண்களுக்கு அடுத்த நிலையில் இருக்கும் 87/2, 17/2 ஆகிய இரு சர்வே எண்களின் கீழ்வரும் 59 ஏக்கர் கேரளாவில் உள்ள பாரக்காட் எனும் தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு முரளி என்பவரால் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது.
மேற்படி முரளி, வெஸ்டாஸ் ஆர்.ஆர்.பி எனப்படும் காற்றாலை நிறுவனத்தைச் சார்ந்த சாமிநாதன் என்பவரிடம் கடந்த 1998ஆம் ஆண்டு கிரையம் வாங்கியிருக்கிறார். அப்படி பாரக்காட் நிறுவனத்தால் வாங்கப்பட்ட நிலத்தில் சம்பந்தப்பட்ட நிலம் காப்புகாட்டிற்குள் வருகிறது என்று தெரிந்தும், சட்டவிரோதமாக தொடர்ச்சியாக 20 நாள்களுக்கும் மேலாக ராட்சத பொக்லைன்களைக் கொண்டு பாதையை சீர் திருத்தம் செய்வது, பாறைகளை உடைப்பது என அத்துமீறிய பணிகளை சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் தேனி மாவட்ட வனத் துறையின் பரிபூரண ஆசியோடு செய்து வருவதாகத் தெரிவித்தார்.