சபரிமலை ஐயப்பன் கோயிலில் வெகு விமரிசையாக நடைபெற்ற மண்டல பூஜை சபரிமலை (கேரளா): புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த நவம்பர் 17ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. இந்த நிலையில் 41ஆவது நாளான இன்று (டிச.27) மண்டல பூஜை, விமரிசையாக நடைபெற்றது. இதில் தந்தரி ராஜுவாரு ஐயப்பனுக்கு மண்டல பூஜையை நடத்தி வைத்தார்.
ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்ட நிலையில், ஐயப்பனுக்கு பாலாபிஷேகம், மஞ்சள் அபிஷேகம், சிறப்பு தீபாராதனைகள் மற்றும் சிறப்பு பூஜைகள் ஆகியவை செய்யப்பட்டன. பின்னர் மண்டல பூஜை முடிவடைந்த நிலையில் கோயில் நடை அடைக்கப்பட்டது.
தொடர்ந்து பிற்பகல் 3 மணிக்கு நடை திறக்கப்பட்ட நிலையில், தங்க அங்கியில் ஐயப்பன் இருக்கும் காட்சிகள் பக்தர்களுக்கு தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட உள்ளது. வருகிற 30ஆம் தேதி மகர விளக்கு ஜோதிக்காக ஐயப்பன் கோயில் நடை மீண்டும் திறக்கப்பட உள்ளது.
சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த மண்டல பூஜையில் தேவசம்போர்டு அமைச்சர், தேவசம்போர்டு அலுவலர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க:தருமபுரி அருகே யானை மீது ஐயப்பன் சுவாமி ஊர்வலம்