தேனி:பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் கிருஷ்ணன்கோவில் தெருவைச் சேர்ந்த ராமையா என்பவர் மகன் முருகானந்தம். இவர் சமையல் கலை படிப்பு படித்துவிட்டு அமெரிக்காவில் உள்ள நட்சத்திர உணவகத்தில் சில ஆண்டுகள் வேலைப் பார்த்து வந்தார். பின்னர், அவர் சொந்த ஊருக்கு வந்து விட்டார். இவர் தனது அக்காள் மகன் அஜீகண்ணன் என்பவருடைய பேஸ்புக் கணக்கை தனது செல்போனில் வைத்து பயன்படுத்தி வந்துள்ளார்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அந்த பேஸ்புக் கணக்கில், எமிலி ஜோன்ஸ் என்ற பெண்ணின் பெயரில் ஒரு குறுஞ்செய்தி சென்றுள்ளது. அதில், தன்னை வாட்ஸ்-அப் மூலம் தொடர்பு கொள்ளுமாறு கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து முருகானந்தம் தனது வாட்ஸ்-அப் எண்ணில் இருந்து அந்தப் பெண் கூறிய வாட்ஸ்-அப் எண்ணுக்கு தொடர்பு கொண்டார்.
அப்போது அந்த பெண், தான் அமெரிக்க ராணுவத்தில் செவிலியராக பணியாற்றி வருவதாகவும், சிரியா நாட்டின் மீது அமெரிக்க படை நடத்திய ஒரு மீட்பு பணியின்போது, சிரியா கலவரக்காரர்களிடம் இருந்து பெரும் தொகையை, அமெரிக்க ராணுவம் கைப்பற்றியதாகவும், அந்த பணத்தை தங்கள் நாட்டின் வங்கிக் கணக்கில் சேர்க்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
இதனால், அமெரிக்க ராணுவம் அந்த பணத்தை ராணுவத்தில் பணியாற்றுபவர்களுக்கு பகிர்ந்து அளிக்க உள்ளதாகவும் கூறியுள்ளதாக தெரிகிறது. மேலும், அமெரிக்க ராணுவத்தில் செவிலியராக பணியாற்றும் தன்னுடைய பங்காக ரூ.20 லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.15½ கோடி) கிடைக்கும் என்றும், அந்த பணத்தை தன்னால் பாதுகாப்பாக வைத்து இருக்க முடியாது என்பதால் தனக்கு தெரிந்த நம்பிக்கையான நபர் யாரிடமாவது கொடுத்து பாதுகாப்பாக வைக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
இந்த பணத்தை பாதுகாப்பாக வைத்து இருந்தால் அந்த பணத்தில் 30 % தொகையை கமிஷனாக கொடுப்பதாகவும், அதற்கு விருப்பம் இருந்தால் தன்னை தொடர்பு கொள்ளுமாறும் அந்த பெண், முருகானந்தத்திடம் குறுஞ்செய்தி வாயிலாக ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். 30 % என்றால் இந்திய மதிப்பில் சுமார் ரூ.4½ கோடி கிடைக்கும். இதை நம்பிய முருகானந்தம், அந்த பணத்தை பாதுகாப்பாக வைத்திருக்க ஒப்புக் கொண்டார். பின்னர், அந்த பெண், முருகானந்தத்தின் விவரங்களை கேட்டு பெற்றுக்கொண்டு, ஏஜென்சி ஒன்றின் மூலம் பணத்தை இந்தியாவுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறியுள்ளார்.