Theni: கூலித்தொழிலாளி வீட்டில் ரூ. 15 லட்சம் கொள்ளை! தேனி:தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே உள்ள க.புதுப்பட்டியில் தொழிலாளி வீட்டில் இருந்து ரூ.15 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உத்தமபாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே க.புதுப்பட்டி எஸ்.டி.கே.நகரைச் சேர்ந்தவர் ஜெயகண்ணன் (வயது 48). இவர் கூலித் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கார்த்திகா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இதில், அவர்களது மகன் திருமணமாகி தனியாக வசித்து வரும் நிலையில் மகள் படித்து வருகிறார்.
ஜெயகண்ணன் அப்பகுதியில் திராட்சை தோட்டத்திற்கு வேலைக்குச் சென்று வருகிறார். மனைவி கார்த்திகா கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் ஏலக்காய் தோட்ட வேலைக்கு ஜீப் மூலம் தினமும் சென்று வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம்(ஜூலை 25) காலை வழக்கம் போல் ஜெயகண்ணனும், அவரது மனைவியும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்குச் சென்றுள்ளனர். எப்போதும் போல் வீட்டின் சாவியை ஜன்னல் அருகேயே வைத்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: 3 ஆண்டுகளாக சின்ன சின்ன திருட்டு.. போலீசில் சிக்காமல் போக்கு காட்டிய இளைஞர்.. சிசிடிவியால் சிக்கியது எப்படி?
பின்னர் வேலை முடிந்து இரவு வேளையில் கணவன், மனைவி 2 பேரும் வீட்டுக்குத் திரும்பி வந்துள்ளனர். அப்போது வீட்டின் கதவு திறக்கப்பட்டு கிடந்ததைக் கண்டு சந்தேகமடைந்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோ திறக்கப்பட்டு, அதில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தது. மேலும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.15 லட்சத்தை காணவில்லை.
இந்த திருட்டுச் சம்பவம் குறித்து ஜெயகண்ணன், உத்தமபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் சம்பவம் நடந்த ஜெயகண்ணனின் வீட்டுக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் தேனியில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
இதனை அடுத்து ஜெயகண்ணன் அளித்தப் புகாரின் பேரில், உத்தமபாளையம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. இந்திய தேசிய லீக் கட்சியின் முன்னாள் நிர்வாகி கைது!