தேனி:தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி நேற்று(ஏப்.14) காலை முதலே பல்வேறு அரசியல் கட்சியினரும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாலையில், பட்டாளம்மன் கோவில் தெரு இளைஞர்களும், கல்லுப்பட்டி இளைஞர்களும் தீச்சட்டி ஏந்தியபடி, மேளதாளங்களுடன் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்றனர்.
அப்போது, யார் முதலில் மரியாதை செலுத்துவது? என்பது தொடர்பாக இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி மோதலாக மாறியது, இளைஞர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். விழா ஏற்பாட்டாளர்கள் வைத்திருந்த நாற்காலிகள் மற்றும் இருசக்கர வாகனங்களையும் இளைஞர்கள் அடித்து நொறுக்கினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், மோதலில் ஈடுபட்ட இளைஞர்கள் விரட்டினர். இதையடுத்து இளைஞர்கள், காவல் நிலையத்திற்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களையும் அடித்து நொறுக்கி, காவல் நிலையத்திற்குள் கல் வீசி தாக்கினார்கள். இதில் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆய்வாளரின் வாகனம், 108 ஆம்புலன்ஸ் வாகனம், பேருந்து கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. 15-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களையும் அடித்து உடைத்தனர். கல் வீசி தாக்குதல் நடத்தியதில் காவல்துறை ஆய்வாளர் மீனாட்சி உட்பட பல காவலர்கள் காயமடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.