தேனி அருகே உள்ள குன்னூர் கிராமத்தில் வைகை ஆற்றில் பயன்பாடின்றி இருக்கும் குடிநீர் உறை கிணற்றில் பச்சிளம் ஆண் குழந்தையின் பிணம் மிதப்பதாக அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற காவல் துறையினர், தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் கிணற்றில் மிதந்த குழந்தையின் உடலை மீட்டனர்.
மேலும் பிறந்து இரண்டு நாள்களே ஆன அந்த ஆண் குழந்தையின் தொப்புள் கொடியில் பிரசவத்தின் போது பொருத்தப்பட்ட கிளிப் கூட அப்படியே இருந்தது காண்போரை கண்கலங்க வைத்தது. பச்சிளம் ஆண் குழந்தையின் பெற்றோர் யார்? குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்தது யார்? என்பது குறித்து க.விலக்கு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த குழந்தையின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை என்பதால், குழந்தை உயிருடன் கிணற்றில் வீசி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.