மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் விவசாயத்திற்கும் மற்றும் குடிநீர் ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை திகழ்ந்து வருகிறது. இந்த அணையின் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் உள்ள நீர்ப்பிடிப்புப்பகுதிகளில் பெய்து வந்த கனமழையால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் கடந்த நாளுக்கு நாள் நீர்மட்டம் உயர்ந்து வந்த நிலையில், முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியுள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப்பின் முல்லைப் பெரியாறு அணை 7ஆவது முறையாக 136 அடியை கடந்ததால், தமிழ்நாட்டில் உள்ள ஐந்து மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று(ஆக.04) காலை விநாடிக்கு 6,143 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று(ஆக.05) 7201 கனஅடியாக அதிகரித்தது. இதனால், நீர்மட்டம் 137.05 அடியானது.
ரூல்கர்வ் (Rule Curve) அட்டவணைப்படி ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 10 வரை அணையில் 137.50 அடி வரை தண்ணீர் தேக்கமுடியும். தற்போது அணையிலிருந்து தமிழ்நாட்டுப்பகுதிக்கு விநாடிக்கு 2016 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் இருப்புநீர் 6,357 மில்லியன் கன அடியாகும்.
2014இல் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி நீர்த்தேக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பு, கடந்த 2014ஆம் ஆண்டு தொடங்கி தற்போது 7ஆவது முறையாக நீர்மட்டம் 136 அடியைக் கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக நீர்மட்டம் அதிகரித்து வருவதனால் இடுக்கி மாவட்டத்திற்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.