தேனி அல்லிநகரத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி கருப்பசாமி. இவரது மூத்த மகன் முத்துக்குமார் (23). இவர் கடந்த செப்டம்பர் மாதம் மலேசியாவிற்கு வேலைக்குச் சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முத்துக்குமார் உயிரிழந்ததாக அவரது பெற்றோருக்கு மலேசியாவிலிருந்து தகவல் கிடைத்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தேனி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் தங்களது மகனின் உடலை மீட்டுத் தரக்கோரி மனு அளித்தனர். நான்கு நாள்கள் ஆகியும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை என்று கூறி அவரது பெற்றோர், உறவினர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட நிர்வாகம் சார்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தாததன் காரணமாக, ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் தேனி - மதுரை நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தேனி - மதுரை நெடுஞ்சாலையில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.