தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கைவிரித்த அரசாங்கம் - வாசகர்களால் புத்துயிர் பெற்ற கால் நூற்றாண்டு கடந்த நூலகம்! - Readers' Library Revived

‘நூலகம் எங்கே அமைந்திருக்கிறது என்பதுதான் நீங்கள் கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டிய ஒரே விஷயம்’ - ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

வாசகர்களால் புத்துயிர் பெற்ற நூலகம்: முதல்நிலைத் தேர்வு புத்தகங்கள் வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை!
வாசகர்களால் புத்துயிர் பெற்ற நூலகம்: முதல்நிலைத் தேர்வு புத்தகங்கள் வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை!

By

Published : Jun 27, 2020, 10:43 AM IST

Updated : Jul 7, 2020, 7:21 PM IST

வாசிப்பு மனிதனின் சிந்தனையை மேம்படுத்தும், அதனால்தான் ‘ஒரு நூலகம் திறக்கப்பட்டால், நூறு சிறைச்சாலைகள் மூடப்படும்’ என சான்றோர் சொல்லி வைத்திருக்கிறார்கள். தினந்தோறும் பல்வேறு தகவல்களை அறிந்துகொள்ள வாசிப்பு மிக அவசியமானதாகிறது. வாசிப்புத் திறனை வளர்த்துக்கொள்ள நுழைவு வாயிலாக நூலகங்கள் உள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் உள்ள பழமையான நூலகக் கட்டடங்களில் ஏராளமானவை சிதிலமடைந்து காணப்படுகின்றன.

அந்த வகையில் தேனி அருகே பல ஆண்டுகளாக ஒரு கிளை நூலகக் கட்டடம் சிதிலமடைந்து காணப்பட்டது. அதை பொதுமக்கள் பங்களிப்புடன் வாசக வட்ட நிர்வாகிகளே புனரமைத்துள்ளனர். போடிநாயக்கனூர் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்டது கோவிந்தநகரம் ஊராட்சி. இந்த கிராமத்தைச் சேர்ந்த காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் முத்துக்கிருஷ்ணன் மற்றும் ராமசாமி ஆகியோரது குடும்பத்தார் சார்பில் தானமாக கொடுக்கப்பட்ட 10 சென்ட் நிலத்தில், 1992ஆம் ஆண்டு அரசு கிளை நூலகம் கட்டிமுடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது.

இந்த நூலகத்தின் உதவியோடு தங்களை தயார்படுத்திக் கொண்ட பலரும் நல்ல பணியில் இருக்கின்றனர். இங்கு கவிதை, நாவல், அறிவியல், வரலாறு, தமிழ் இலக்கியங்கள், மருத்துவம் உள்ளிட்ட பிரிவுகளில் சுமார் 25,000 புத்தகங்கள் உள்ளன. ஏறக்குறைய 100 பேர் இந்தக் கிளை நூலகத்தில் புரவலர்களாக உள்ளனர்.

இந்நூலகக் கட்டடம் 25 ஆண்டுகளைக் கடந்ததால், நாளடைவில் சிதிலமடைந்து காணப்பட்டது. இதை புனரமைக்க நூலகர் பால்ராஜ் முயற்சியால் வாசகர் வட்டம் உருவாக்கப்பட்டு, அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மாவட்ட நூலகர், ஆட்சியர் மற்றும் போடிநாயக்கனூர் சட்டப்பேரவை உறுப்பினரும் தமிழக துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வரை சென்று புனரமைத்து தருமாறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து 2016ஆம் ஆண்டு கட்டட பராமரிப்பிற்கான திட்ட மதிப்பீடு ரூ.7.50 லட்சம் என பொதுப்பணித் துறையால் தயார் செய்யப்பட்டது. ஆனால், நூலகக் கட்டடத்தை பராமரிப்பதற்கு தேவையான நிதி அரசிடம் இல்லை என துறை சார்ந்த அமைச்சர் கைவிரித்துள்ளார். இதன் காரணமாக திட்ட மதிப்பீடு தயார் செய்து 4 ஆண்டுகளாக கிடப்பிலேயே போடப்பட்டது. இந்நிலையில், வாசகர் வட்ட நிர்வாகிகள் மற்றும் கிளை நூலகர் ஆகியோர் பொதுமக்கள் பங்களிப்புடன் நூலகக் கட்டடத்தை சீரமைக்க தீர்மானித்தனர். இதற்காக கிராமக்கமிட்டியின் உதவியை நாடி மாவட்ட ஆட்சியர், மாவட்ட நூலகர் ஆகியோரிடம் தங்கள் எண்ணத்தை தெரிவித்துள்ளனர். இதனை ஏற்று பராமரிப்பு பணிகள் செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டது.

இதையடுத்து வாட்ஸ்அப்பில் குழு உருவாக்கப்பட்டு, வெளியூர் மற்றும் வெளிநாடு வாழ் கோவிந்தநகர கிராம மக்களிடம் நூலகக் கட்டடத்தின் நிலையை சொல்லி உதவிடுமாறு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அறிந்து மக்கள் ரூ. 2.63 லட்சம் வரை நன்கொடை அளித்தனர். கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையிலும், நூலக புனரமைப்புப் பணிகளை கிராம மக்கள் தொடர்ந்து செய்து முடித்தனர். இதனால் பழுதடைந்து காணப்பட்ட கோவிந்தநகரம் கிளை நூலகக் கட்டடம் தற்போது புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. ஊரடங்கு தளர்விற்குப் பிறகு வாசகர்களின் பயன்பாட்டிற்கு வரவுள்ளது இந்நூலகம்.

கைவிரித்த அரசாங்கம் - வாசகர்களால் புத்துயிர் பெற்ற கால் நூற்றாண்டு கடந்த நூலகம்!

இது குறித்து வாசகர் வட்ட நிர்வாகிகள் கூறுகையில், நிதிப் பற்றாக்குறையை காரணம் காட்டி நூலகக் கட்டடத்தை புனரமைக்க அரசு மறுத்துவிட்டது. ஆனால், கிராம மக்கள் பங்களிப்புடன் நாங்களே நிதி திரட்டி இப்பணிகளை செய்துள்ளோம். பொதுப்பணித் துறை தயார் செய்த திட்ட மதிப்பீடான ரூ. 7.50 லட்சத்தை விட குறைவாக ரூ. 2.63 லட்சத்திலேயே இப்பணிகளை செய்து முடித்துள்ளோம். இதேபோல தமிழ்நாட்டில் சிதிலமடைந்துள்ள சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிளை நூலகங்களை கிராம மக்களிடம் ஒப்படைத்தால், அவர்களே புனரமைத்து விடுவார்கள். அரசிற்கும் நிதிச்சுமை ஏற்படாது என்றனர்.

பொதுவாக மத்திய, மாநில அரசுகள் நடத்துகிற போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வதற்கு தேனி, மதுரை, கோவை, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்குதான் கோவிந்தநகரம் மக்கள் செல்ல வேண்டும். தற்போது பழுதடைந்த கட்டடத்தை வாசகர் வட்டத்தினர் சீரமைத்து கொடுத்துள்ளனர். போட்டித் தேர்வுகளை எதிர்கொள்பவர்களுக்கான பயிற்சி வகுப்புகளையாவது நூலகத்தில் நடத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போட்டியாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதையும் படிங்க...'பத்தாம் வகுப்பு தனித்தேர்வு எழுதும் மாணவர்கள் நிலை?' - பதில் சொல்ல மறுத்த அமைச்சர்!

Last Updated : Jul 7, 2020, 7:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details