குப்பை கிடங்கு மற்றும் சாக்கடை கழிவுக்கு நடுவே ரேஷன் கடை: சுகாதாரமற்ற பொருட்களை எப்படி வாங்கி உண்பது?... மக்கள் கேள்வி தேனி:பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட 12வது வார்டு, காயிதே மில்லத் நகர் பகுதி ஆகும். இப்பகுதியில் நியாய விலைக் கடை கட்டுவதற்காக கடந்த ஆண்டு மே மாதம் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து, சுமார் 18 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக நியாய விலைக் கடை கட்டிடம் கட்டும் பணியானது துவக்கப்பட்டது.
அதாவது நியாய விலைக் கடைக்கான கட்டிடம் கட்டத் தேர்வு செய்யப்பட்ட இடமானது, பெரியகுளம் பொது மயானத்திற்குச் செல்லும் வழியில் உள்ள குப்பைக் கிடங்கு மற்றும் பாதாளச் சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நடுவே உள்ளது. அங்கே இருந்த குப்பைகளை அகற்றி விட்டு, அந்த இடத்தை தேர்வு செய்துள்ளனர்.
கட்டிடப்பணி துவங்குவதற்கு முன்பே, சுகாதாரமற்ற பகுதியான குப்பைக் கிடங்கில் நியாய விலைக் கடை அமைத்து பொருட்கள் வழங்கினால் எப்படி வாங்குவது என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பினர். ஆனால், தற்பொழுது நியாய விலை கடையானது அங்கேயே கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குப்பைகளுக்கு நடுவே கட்டப்பட்டுள்ள அந்த நியாய விலைக் கடைக்கு திறப்பு விழா நடைபெற்றது. அந்த திறப்பு விழாவை, பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பொதுவாகவே அப்பகுதியில் அதிகம் துர்நாற்றம் வீசுவதால், அந்த இடத்தை கடந்து செல்லவே மக்கள் சிந்திக்கின்றனர். அப்படியே கடக்க வேண்டும் என்றாலும், மூக்கைப் பிடித்துக் கொண்டு செல்லும் அவல நிலை நிலவுகிறது. அப்படிப்பட்ட இடத்தில்தான் தற்போது நியாய விலைக் கடை திறந்து வைத்து பொருட்கள் வழங்கப்பட உள்ளது.
இதுபோல குப்பைக் கிடங்கிற்கு நடுவே கட்டப்பட்டுள்ள நியாய விலைக் கடையில் பொருட்களை வாங்கி எப்படி உண்பது எனவும், இதற்கு அரசு அதிகாரிகள் எப்படி துணை போனார்கள் என்பதும் அப்பகுதி பொதுமக்களின் கேள்வியாக உள்ளது. மேலும், இந்த நிகழ்ச்சியில் பெரியகுளம் நகர்மன்றத் தலைவர் சுமிதா சிவக்குமார் மற்றும் நகராட்சி ஆணையாளர் கணேசன் உள்ளிட்ட நகர்மன்ற உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ராமேஸ்வரத்தில் கனமழை; ராமநாதசுவாமி கோயில் வளாகத்தில் புகுந்த மழைநீர் - பக்தர்கள் அவதி!