தமிழ்நாடு-கேரளா எல்லையை ஒட்டி அமைந்துள்ள குமுளி சோதனைச்சாவடியில் தேனி மாவட்ட காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த லாரியை சோதனை செய்த காவல் துறையினர் அதில் 50 கிலோ எடையுள்ள 220 மூட்டை ரேஷன் அரிசி இருப்பதைக் கண்டறிந்தனர்.
பின்னர், லாரியை ஓட்டிவந்த கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் நெடுங்கண்டத்தைச் சேர்ந்த பினிஷ் (36), அதேப் பகுதியைச் சேர்ந்த லாரி உரிமையாளர் ஜெயராஜ் (30) ஆகியோரிடம் நடத்திய விசாரணையில், தேனி மாவட்டம் கோம்பை, உத்தமபாளையம், கம்பம், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள தரகர்கள் மூலமாக குறைந்த விலைக்கு ரேஷன் அரிசிகளை வாங்கி, கேரளாவிற்கு கடத்திச் சென்று விற்பனை செய்துவருவது தெரியவந்தது.