புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று தேனியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஏழு உட்பிரிவுகளை உள்ளடக்கி தேவேந்திர குல வேளாளர் என்ற மசோதா கடந்த 13ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இது ஏற்புடையது என்றாலும், முழுமையானதல்ல. குடும்பன், பன்னாடி, காலாடி உள்ளிட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பெயர்களுக்கு எந்தவித குறைகளும் இல்லை. அதேவேளையில் இச்சமுதாயத்தினரை பட்டியல் பிரிவில் வைத்திருப்பதால், அவர்களின் அடையாளம் மறைக்கப்பட்டது, வளர்ச்சி தடைபட்டது, பொதுமக்களோடு கலந்துகொள்ளும் வாய்ப்பு தடைப்பட்டதால், சண்டைகளும், சச்சரவுகளும் ஏற்பட்டு சமூக நல்லிணக்கம் கெட்டுவிட்டது.
தமிழராகவோ, இந்துவாகவோ, இந்தியராகவோ அடையாளப்படுத்த முடியாமல் ஒரு தீண்டாமைச் சுவராகவே பட்டியல் பிரிவில் இன்று வரை இருந்து வருகிறது. அதனால்தான் பட்டியல் பிரிவிலிருந்து வெளியேற்றப்பட்டு தேவேந்திர குல வேளாளர் என்று அழைக்கப்பட வேண்டும் என்பதே இச்சமுதாய மக்களின் கோரிக்கை. எனவே வருகிற மார்ச் 8ஆம் தேதி நாடாளுமன்றத்தில் இந்த மசோதா விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளும் வேளையில், பட்டியல் பிரிவிலிருந்து வெளியேற்றப்பட்ட புதிய ஷரத்தையும் இணைத்து திருத்த மசோதாவையும் நிறைவேற்றித் தர வேண்டும் என்பதே எங்களின் முக்கிய கோரிக்கை ஆகும்.