தேனி மாவட்டம் கூடலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது தம்மணம்பட்டி. அப்பகுதியில் 58 குடும்பங்கள் ஆக்கிரமிப்பு செய்து குடியிருந்து வருகின்றனர். இவர்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் புதிய வீடுகள் வழங்குவதற்கான கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன.
பல ஆண்டுகளாக அப்பகுதியில் குடியிருந்தவர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் தற்போது அவர்கள் வசித்து வரும் ஆக்கிரமிப்பு வீடுகளை காலிசெய்யுமாறு அண்மையில் வருவாய்த்துறையினர் நோட்டீஸ் வழங்கினர்.
வீடுகளை அகற்றுவதால் பொதுமக்கள் போராட்டம் இதில் 36 குடும்பங்கள் தங்களது குடியிருப்புகளை விட்டு காலி செய்தனர். எஞ்சிய 22 குடும்பங்கள் இதுவரை காலி செய்யாததால் இன்று (டிச.11) உத்தமபாளையம் தாசில்தார் உதயாராணி தலைமையில் அகற்றுவதற்காக காவல்துறையினரின் பாதுகாப்புடன் வருவாய்த் துறையினர் வந்தனர்.
ஆனால் தங்களுக்கு மாற்று இடம் கொடுத்த பின் வீடுகளை அகற்றக்கோரி பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அலுவலர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை வலுக்கட்டாயமாக காவல்துறையினர் அப்புறப்படுத்தி கைது செய்தனர்.
அப்போது சந்திரா என்ற பெண் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து கீதா என்ற பெண் கத்தியை வயிற்றில் வைத்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டினார்.
இச்சம்பத்தில் ஈடுபட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனர். பின்னர் உத்தமபாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளர் சின்னகண்ணு தலைமையில் கூடுதல் காவல்துறையினர் குவிக்கப்பட்டு தகுந்த பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு வீடுகள் முழுவதும் அகற்றப்பட்டது.
இதையும் படிங்க: பாரம்பரிய காளைகளை அழிக்க சட்டம் கொண்டுவந்துள்ள அதிமுக: கார்த்திகேய சிவசேனாதிபதி