தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி பேரூராட்சிக்குள்பட்ட 14, 15, 16 வார்டு, கக்கன்ஜி காலனி ஆகிய பகுதிகளில் வடிகால், குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி, அப்பகுதியினர் பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கைவிடுத்திருந்தனர்.
ஆனால் பொதுமக்களின் கோரிக்கையைத் தற்போதுவரை பேரூராட்சி நிர்வாகம் செய்து தரவில்லை. இந்நிலையில் குடியிருப்புப் பகுதிகளின் நீண்டகால கோரிக்கைகளைச் செய்து தராத பேரூராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து நேற்று (பிப். 2) அப்பகுதி மக்கள் பேரூராட்சி அலுவலகத்திற்குப் பூட்டுப்போடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுமக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் பங்கேற்றனர். தேவதானப்பட்டி பேருந்து நிலையத்திலிருந்து பூட்டுச் சங்கிலியுடன் ஊர்வலமாகச் சென்ற பொதுமக்கள் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் அமர்ந்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.