தேனி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் இன்று (செப்டம்பர் 8) நடைபெற்றது. தேனி மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு குழுத் தலைவரும் தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத்குமார் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி, வேளாண்மை, தோட்டக்கலை, உள்ளிட்ட பல்வேறு துறை சார்பில் செயல்படுத்தப்படும் மத்திய அரசு திட்டங்களின் பயன்பாடு முன்னேற்றம் மற்றும் செயல்பாடுகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் விரிவாக எடுத்துரைத்தனர்.
தேனி மாவட்டத்தில் அனைத்து மத்திய அரசு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு அனைத்து துறை அலுவலர்களும் முனைப்போடு செயல்பட வேண்டுமெனவும் கண்காணிப்புக் குழுத் தலைவரான தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி.ஆர் தெரிவித்தார்.
மேலும் தேனி மாவட்டத்தில் அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கைகளையும் முழுமையாக நிறைவேற்ற மத்திய அரசின் சம்பந்தப்பட்ட துறை செயலர்களுக்கு பரிந்துரைத்து தேவையான நிதி மற்றும் சலுகைகளை உடன் பெற்றுத்தருவதாக அவர் உறுதியளித்தார். இந்த கூட்டத்தில், கண்காணிப்பு குழு உறுப்பினர்களான ஆட்சியர் பல்லவி பல்தேவ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் திலகவதி உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.