தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓ.பி.எஸ் அலுவலகம் முன்பு தேங்கி நிற்கும் மழைநீர்: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் பணிகள் நடைபெற்று வந்த ரயில்வே சுரங்கப்பாதையில் 20அடிக்கும் மேலாக தேங்கி நின்று குளம்போல் காட்சி அளிப்பதனால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

20அடிக்கும் மேலாக தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
20அடிக்கும் மேலாக தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 30, 2023, 1:44 PM IST

20அடிக்கும் மேலாக தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

தேனி: தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் ரயில்வே நிலையம் அருகில் அமைந்துள்ளது சுப்புராஜ் நகர். கல்லூரி பேராசிரியர்கள், அரசு பணியாளர்கள், ஏலக்காய் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் அதிகளவில் இப்பகுதியில் வசித்து வருகின்றனர். தமிழ்நாடு முன்னாள் முதல்வரும், போடிநாயக்கனூர் சட்டமன்ற உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வத்தின் சட்டமன்ற அலுவலகம் மற்றும் வீடும் இப்பகுதியில்தான் உள்ளது.

இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு போடிநாயக்கனூர் ரயில்வே திட்ட விரிவாக்க மேம்பாட்டு பணிகள் காரணமாக, இந்தப்பகுதியில் இருந்து புதுக்காலனி செல்லும் சாலை வரை தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு மதுரை மற்றும் சென்னையிலிருந்தும் வரும் ரயில்கள் நின்று செல்வதற்காக அவ்வழி அமைந்துள்ள சாலையில் போக்குவரத்து நிரந்தரமாக மூடப்பட்டு இருப்புப் பாதைகள் அமைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இப்பகுதி மக்கள் இந்த பாதையில் மேம்பாலம் அமைத்து தரக்கோரி அப்போதைய மாவட்ட ஆட்சியர் முரளிதரனிடம் கோரிக்கை விடுத்த நிலையில், ரயில்வே நிர்வாகம் இப்பகுதியில் தண்டவாளத்திற்கு கீழ் சுரங்க பாதை அமைக்க திட்டமிட்டு பணிகள் நடந்து வருகின்றன. இன்னும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராத இந்த சுரங்கப்பாதையில் கடந்த சில தினங்களாகப் பெய்து வரும் தொடர் மழை காரணமாக சுரங்கப் பாதையில் சுமார் 20 அடி ஆழத்திற்கு மழைநீர் தேங்கி உள்ளது.

கடந்த 20 நாட்களாகியும் இன்னும் மழை நீர் அப்புறப்படுத்தாததால் இப்பகுதி பொதுமக்களும் குடியிருப்பு வாசிகளும் மிகுந்த சிரமத்திற்கு அச்சத்திற்கும் உள்ளாகி வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் குழந்தைகள் தற்போது பள்ளி விடுமுறை என்பதால் ஆபத்தை அறியாமல் நீரில் இறங்கி அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் உள்ளதால் பெற்றோர்கள் மிகுந்த அச்சத்திற்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகி வருகின்றனர்.

இது மட்டுமின்றி, அகற்றப்படாமல் தேங்கிக் கிடக்கும் நீரில் அருகில் உள்ள பாதாளச் சாக்கடை நிரம்பி வழிந்து சுரங்கப்பாதையில் உள்ள நீருடன் கலந்துள்ளதால் மிகுந்த துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகும் சூழல் ஏற்பட்டு டெங்கு, மலேரியா, நிமோனியா போன்ற பல்வேறு தொற்று நோய்களுக்கு குழந்தைகளும் பெரியோர்களும் ஆளாகி வருவதாகம் கூறப்படுகிறது.

மேலும் தேங்கியுள்ள நீரில் தவளைகள் அதிகளவில் உற்பத்தியாவதனால் பாம்புகளின் நடமாட்டம் உள்ளதாகவும், அவ்வப்போது வீட்டிற்குள் நுழைவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் தெரிவித்தனர். 20 நாளாக மழை நீருடன் பாதாளச் சாக்கடை கழிவுநீரும் கலந்து தண்ணீர் மிக விஷத்தன்மையாக மாறி உள்ளதால் இப்பகுதியில் இருந்து வரும் குடிநீரும் மிகுந்த துர்நாற்றம் வீசுவதாக வேதனை தெரிவித்தனர்.

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரான ஓ.பன்னீர்செல்வத்தின் சட்டமன்ற அலுவலகம் அருகில் வசித்து வரும் எங்களுக்கு இந்த நிலைமை என்றும், இதுவரை பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகனும் தேனி பாராளுமன்ற தொகுதியின் எம்பி-யுமான ரவீந்திரநாத் நகராட்சி அலுவலர்கள், கவுன்சிலர்கள் என யாருமே இது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். மேலும், தேங்கி கிடக்கும் தண்ணீரை ரயில்வே நிர்வாகம் நகராட்சி நிர்வாகமும் இணைந்து சுரங்கப்பாதையை சீரமைப்பிற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details