தேனியிலிருந்து கம்பம் மெட்டு, போடி மெட்டு, குமுளி மூன்று மலைப்பாதைகள் கேரளத்திற்குச் செல்கிறது. காலாவதியான மருத்துவக் கழிவுகள், இறைச்சிக் கழிவுகள் உள்ளிட்டவைகளை கேரளத்திலிருந்து தமிழ்நாட்டை இணைக்கும் மலைப்பாதையிலிருந்து வனப்பகுதிக்குள் கொட்டிச்செல்வது கடந்த சில ஆண்டுகளாக வாடிக்கையாக இருந்துவந்தது.
பொதுமக்களின் புகாரையடுத்து தமிழ்நாட்டிற்குள் நுழையும் வாகனங்கள் சோதனைச் சாவடிகளில் பலத்த சோதனைக்கு பின்பே அனுமதிக்கப்பட்டன. இதன் காரணமாக கேரள கழிவுகள் தமிழ்நாடு பகுதிக்குள் கொட்டுவது தடுக்கப்பட்டது.
கடந்த சில நாள்களாக கேரள கழிவுகளை தேனி மாவட்டத்தின் மலைப்பகுதிகளாக இருக்கும் இடங்களான ஆண்டிபட்டி சாஸ்தா கோயில் போன்ற பகுதிகளில் அவ்வப்போது கொட்டிவந்தனர். இந்நிலையில் தற்போது தேனி நகரை ஒட்டியுள்ள புறவழிச்சாலை அருகே வால் கரடு வனப்பகுதிக்குள் கேரளக் கழிவுகளை அதிக அளவு கொட்டி தீவைக்கின்றனர்.
இதில் காலாவதியான வாகனங்களின் உதிரிபாகங்கள், நெகிழிக் கழிவு, மருத்துவக் கழிவு, காலாவதியான ஓட்டுநர் உரிமம், காலாவதியான வாகன பதிவு சான்றிதழ் உள்ளிட்டவைகளை வனப்பகுதிக்குள் கொட்டி தீவைத்துச் செல்கின்றனர்.