பொதுப் பாதையை ஆக்கிரமித்து மழை நீர் வடிகால் அமைக்கும் பணிக்கு மக்கள் எதிர்ப்பு தேனி:தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சரத்துப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமத்தில் குடியிருப்பு பகுதிகளிலிருந்து வெளியேறும் சாக்கடை கழிவு நீரை வெளியேற்றவும், மழைக் காலங்களில் தெருக்களில் நீர் தேங்காமல் இருக்கவும் மழை நீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதற்காக பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய திட்டத்திலிருந்து 6 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, டெண்டர் விடப்பட்டு கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே ஒப்பந்ததாரர் தனியாருக்கு ஆதரவாகச் செயல்பட்டு, சாலையை ஆக்கிரமித்து கழிவு நீர் செல்லும் வாய்க்கால் அமைக்கும் பணியைச் செயல்படுத்தி வருவதாகக் கூறி, சரத்துப்பட்டி கிராம மக்கள் பணியைத் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: மனநலம் பாதிக்கப்பட்ட பெண் வழக்கு; மெத்தனமாக செயல்பட்டதாக காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!
மேலும், வீடுகள் இல்லாத பகுதிகளில் சாலையை ஆக்கிரமித்துள்ள செங்கல், காளவாசல் உள்ளிட்ட தனியார் நிலங்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு பொதுப்பாதையை ஆக்கிரமித்து, கழிவுநீர் செல்லும் வாய்க்கால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அங்கு வந்த பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகதீசன், பணிகள் நடைபெறுவதை பார்வையிட்ட பின் தவறாக போடப்பட்ட கழிவுநீர் வாய்க்காலை அகற்றிவிட்டு, சாலையின் ஓரத்தில் உரிய இடத்தில் வாய்க்கால் அமைக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார். இதனையடுத்து, பணிகள் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: மருத்துவர்கள் பற்றாக்குறையை போக்க சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் - முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்