தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றியத்திற்கு உட்பட்டது ஒக்கரைப்பட்டி கிராம ஊராட்சி. ஆறு வார்டுகள் கொண்ட இந்த ஊராட்சியில் தலைவராக வீரஅழகம்மாள், துணைத் தலைவராக மணிகண்டன் ஆகியோர் பதவி வகித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஊராட்சிமன்றத் தலைவர் வீரஅழகம்மாள், அவரது குடும்பத்தினர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாகக் கூறி துணைத் தலைவர் மணிகண்டன் நேற்று திடீரென தர்னாவில் ஈடுபட்டார்.
ஒக்கரைப்பட்டி ஊராட்சிமன்ற அலுவலகத்தில் கைகளில் பதாகைகளுடன் அமர்ந்த மணிகண்டன், ஊராட்சிமன்றத் தலைவர் தன்னிச்சையாக செயல்படுவதாகவும், அவரது கணவர் மணிகண்டன் நிழல் தலைவராக வலம்வருவதாகவும், அரசின் நலத்திட்டங்கள் மற்றும் குடிநீர் இணைப்புகளுக்காக மக்களிடம் லஞ்சம் பெறுவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளைத் தெரிவித்தார்.
எனவே ஊராட்சிமன்றத் தலைவர், அவரது குடும்பத்தினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையெனில் சாகும்வரை போராட்டத்தில் ஈடுபடப் போவதாகக் கூறி தரையில் அமர்ந்தார். அவருக்கு ஆதரவாக 1ஆவது வார்டு உறுப்பினர் வெண்ணிலா, 4ஆவது வார்டு கிருஷ்ணவேணி ஆகிய 2 பெண் உறுப்பினர்களும் தர்ணாவில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த ஆண்டிபட்டி மண்டல துணை வட்டாட்சியர் பால்பாண்டி, இராஜதானி காவல் துறையினர், மணிகண்டனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அதற்கு சம்மதிக்காத மணிகண்டன், 2 பெண் உறுப்பினர்கள் தொடர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர்.
பின்னர் ஆண்டிபட்டி ஒன்றியப் பெருந்தலைவர் லோகிராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆண்டாள், ஜெயகாந்தன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் ஒக்கரைப்பட்டி ஊராட்சியில் முறைகேடுகளில் ஈடுபடுவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும், புதிய குடிநீர் திட்டத்திற்குத் தேவையான நிதி ஒதுக்கப்படும் என வாக்குறுதி அளித்ததையடுத்து தர்னாவை கைவிட்டு அங்கிருந்து கலைந்தனர்.