மேற்குத்தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்ட தேனி மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக கால்நடை வளர்ப்பு தான் பிரதானத் தொழில். அதுவும் நாட்டு இன மாடுகள் அதிகம். இந்த மாடுகள் பெரும்பாலும் மலைப்பகுதியில் மேய்ச்சலுக்கு அனுப்பப்படுவதாலும் அங்கேயே தங்கி, கிடை அமைத்து வளர்க்கப்படுவதாலும் மலை மாடுகள் என்றும்; கிடை மாடுகள் என்றும் சொல்லப்படுகின்றன.
மாடுகளை வளர்க்க போதிய நிலமில்லாத மாட்டுக்காரர்கள் மலைப்பகுதிகளையும் தரிசு நிலங்களையும் நம்பிதான் வாழ்வாதாரத்தையே நடத்துகின்றனர். ஆனால், மேய்ச்சலுக்கு காடுகள், தோட்டங்கள் பக்கம் சென்றால் நிலக்கிழார்களால் அவமதிக்கப்படும் இவர்கள், வேறு வழியின்றி மலைப்பகுதிகளுக்குச் செல்லும் போது வனத்துறையினர் அனுமதி தர மறுக்கிறார்கள்.
மேய்ச்சலின்றி சாகும் மலை மாடுகள் - சிறப்புத் தொகுப்பு கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட நாட்டு மாடுகள் வளர்க்கப்பட்ட தேனி மாவட்டத்தில், தற்போது 15 ஆயிரம் மாடுகளே உள்ளன. 'மேகமலை' வன உயிரினச் சரணாலயமாக உருவாக்கப்பட்டதால், கடந்த 10 ஆண்டுகளாக வனப்பகுதியில் மலை மாடுகளை மேய்ச்சலுக்கு அனுமதிப்பதில் வனத்துறை கெடுபிடி காட்டி வருகிறது.
மேய்ச்சலுக்குச் செல்லாமல் தொழுவத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மலை மாடுகள் ஒரு தொழுவத்தில் உள்ள மாடுகளுக்கு மட்டும் நாளொன்றுக்கு ஒரு லோடு வைக்கோல் தேவைப்படும். அதன் விலை ஏழாயிரம் ரூபாய். ஒரு நாளைக்கு ஏழாயிரம் ரூபாய் செலவழிக்க வசதி இருந்தால், நாங்கள் ஏன் மாடு மேய்க்கப் போகிறோம் என்று மாடு மேய்ப்பவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
வனத்துறை அலுவலர்கள் காட்டும் கெடுபிடியால் மாடுகள் மேய்ச்சலுக்குச் செல்லாமல் தொழுவத்திலேயே அடைத்து வைக்கப்பட்டுள்ளன. இதனால் தீவனப் பற்றாக்குறை ஏற்பட்டு மாடுகள் உயிரிழந்து வருகின்றன.
வெயில் காலத்தில் வறட்சி! மழைக் காலத்தில் ஈரப்பதம்! என்று எப்போதும் சிரமங்களை சந்திக்கும் மாட்டுக்காரர்கள் இதுகுறித்து 110 வயதுடைய சின்னாயக்கர் கூறுகையில், 'அந்தக் காலத்தில் கண்டமனூர் ஜமீன் அனுமதிச் சீட்டு, வெள்ளைக்காரர்கள் ஆட்சியில் எந்தவித நிபந்தனையுமின்றி தங்கு தடையின்றி கிடைத்தது. மலைகளில் எங்கும் சென்று மாடுகளை மேய்த்து வந்தோம். ஆனால், சுதந்திர இந்தியாவில் தற்போது மலைகளில் மாடுகளை மேய்க்க, நமது அரசுத் துறை அதிகாரிகள் அனுமதி மறுப்பது வேதனையளிப்பதாக இருக்கிறது’ என்றார்.
இது குறித்து கர்னல் ஜான் பென்னிகுவிக் பாரம்பரிய மலை மாடுகள் வளர்ப்போர் சங்கச் செயலாளர் சுரேஷ்குமார் கூறுகையில், 'வன உயிரின சரணாலயம் என்ற பெயரில் மாடுகளை மேய்ப்பதற்கு வனத்துறை அனுமதி மறுக்கிறது. ஆனால், அண்டை மாநிலமான கேரளாவில் உள்ள பெரியார் புலிகள் காப்பக சரணாலயப் பகுதிகளில் மாடுகள் மேய்வதற்கு அனுமதிக்கின்றனர். நாட்டு மாடு இனங்களை காப்பதற்கு பிரதமர் மோடி உத்திரப்பிரதேசத்தில் கோசாலைகள் அமைத்து பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றார். எடப்பாடி பழனிசாமியும் நாட்டு மாடு இனங்கள் மற்றும் இயற்கை விவசாயத்தை காத்திட சேலத்தில் கண்காட்சி நிகழ்ச்சி ஏற்படுத்தி ஊக்குவித்து வருகின்றார்" என்றார்.
தேனி மாவட்டத்தில் மட்டும் உள்ள வனத்துறையினர் மலைகளில் நாட்டு மாடுகளை மேய்த்தால் மாட்டுக்காரர்களை கைது செய்கின்றனர். நேற்று கூடலூர் வனப்பகுதியில் மாடுமேய்த்த இருவர் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், "மாடுகளின் இறப்பைத் தடுத்திட எப்போதும் போல மலைகளில் மேய்ச்சலுக்கு அனுமதிக்க வேண்டும். இல்லையென்றால் விரைவில் மாடுகளுடன் சாலையில் இறங்கி போராடுவோம்" என்று அப்பகுதியினர் கூறுகின்றனர்.
இதையும் படிங்க;
சித்திரை திருவிழாவை 'மிஸ் செய்யும்' அனைவருக்கும் இது சமர்ப்பணம்