தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கடமலைக்குண்டு கிராமத்தில் தனியார் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் கடமலைக்குண்டு கிராமத்தைச் சேர்ந்த இலக்கியா, ஆனந்தன் தம்பதிகளின் மகள் யுகிதா ஏழாம் வகுப்பு படித்து வந்தார். யுகிதாவின் தந்தை ஆனந்தன் விவாகரத்து பெற்று பிரிந்து சென்று விட்ட நிலையில், இலக்கியா தனது மகளை கஷ்டப்பட்டு படிக்க வைத்து வருகிறார். எல்.கே.ஜி முதல் ஏழாம் வகுப்பு வரை அதே பள்ளியில் படித்து வரும் யுகிதா நடப்பாண்டில் கல்விக்கட்டணம் செலுத்தாமல் இருந்து வந்துள்ளார். ரூ.25 ஆயிரம் பள்ளிக்கட்டணம் செலுத்த பள்ளி நிர்வாகம் கூறிய நிலையில், கடந்த வாரம் ரூ.6 ஆயிரத்தை யுகிதாவின் தாயார் செலுத்தியுள்ளார்.
இந்நிலையில் மீதித்தொகையையும் உடனே கட்டவேண்டும் என்று கூறி தற்போது நடைபெற்று வரும் காலாண்டுத்தேர்வை எழுதவிடாமல் மாணவி யுகிதாவை வெளியேற்றியது, பள்ளி நிர்வாகம். இதனால் பள்ளி வாசலில் சீருடை மற்றும் புத்தகப்பையுடன் அழுதுகொண்டே நின்றிருந்தவரை, தாயார் இலக்கியா பள்ளிக்குச் சென்று கண்ணீர் மல்க அழுது கொண்டே வீட்டிற்கு அழைத்துச் சென்றார். இச்சம்பவம் அனைத்து பெற்றோர் மத்தியிலும்; பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து தனது மகளை குமணன்தொழுவில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சேர்த்துள்ளார், அவரது தாயார் இலக்கியா.