தேனியில் வீட்டுக் கடன் செலுத்தவில்லை என தனியார் நிதி நிறுவன ஊழியர்களின் செயலால் அதிர்ச்சி தேனி:ஆண்டிபட்டி அருகே வாங்கிய கடனுக்கு தவணை செலுத்திய பிறகும், பாக்கி இருப்பதாகக் கூறி வீட்டுச் சுவரில் வீட்டுக்கடன் செலுத்தவில்லை என்று பெரிய எழுத்துக்களில் பெயிண்டால் எழுதி வைத்து விட்டுச் சென்ற தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் மீது கூலித்தொழிலாளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள அன்னை இந்திரா நகர் காலனியில் வசித்து வருபவர், பிரபு. இவர் தனியார் நிறுவனத்தில் சமையலராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவர் வசிக்கும் வீட்டின் மீது தேனியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ.3 லட்சம் அடமானக் கடன் பெற்றுள்ளார்.
இதை கடந்த செப்டம்பர் மாதமே முழுக் கடன் தொகையும் கட்டியதாக பிரபு தரப்பில் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, கடன் தொகையை கட்டியதால் வீட்டுப் பத்திரம் வேண்டும் என கேட்டுள்ளார். அப்பொழுது, பிரபுவின் வீட்டிற்கு வந்த தனியார் நிதி நிறுவன ஊழியர்கள், கடனைச் செலுத்தவில்லை எனக்கூறி இரண்டு பேர் இருசக்கர வாகனங்களை எடுத்துச் சென்றுள்ளனர். இதனால் அதிருப்தியடைந்த பிரபு, காவல் துறையினருக்கு புகார் கொடுத்து இருசக்கர வாகனங்களை மீட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த நிதி நிறுவன ஊழியர்கள், 'போலீசில் புகார் கொடுத்து எங்களை அசிங்கப்படுத்தி விட்டாய். உன்னை சும்மா விடமாட்டோம்' என மிரட்டிவிட்டுச் சென்றுள்ளனர். இந்நிலையில், நேற்று தனியார் நிதி நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர் மகேந்திரபிரபு மதுபோதையில் பிரபுவின் வீட்டிற்குச் சென்று ஸ்பிரே பெயிண்ட் மூலம் தனியார் நிறுவனத்தில் கடன் பெற்ற வீட்டுக் கடன் கட்டவில்லை' என சுவரில் எழுதியுள்ளார். இது குறித்து வீட்டு உரிமையாளர் பிரபுவிடம் கேட்டபோது 'அப்படித்தான் செய்வேன்' என்று மிரட்டல் தொனியில் பேசியதாக பிரபு தெரிவித்துள்ளார். மேலும் வீட்டிலிருந்த பிரபுவின் குடும்பத்தினரையும் மிரட்டி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பிரபு, வாங்கிய கடனுக்கு பணம் செலுத்திய பின்பும் தன்னையும், தனது குடும்பத்தினரையும் மிரட்டிய தனியார் நிதி நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி கானாவிலக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும், தனது வீட்டு ஆவணங்களை மீட்டுத் தர தேனி மாவட்ட காவல் துறையும், தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க:"கெஞ்சிப் பார்த்தேன் கேட்கல அதான் கொன்னுட்டேன்.. என்னை தூக்துல போடுங்க" - நெல்லை இளம்பெண் கொலையில் கைதான சிறுவன் கதறல்!