தேனி மாவட்டம் பெரியகுளம் சாலையில் தனியாருக்குச் சொந்தமான இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகன விற்பனை நிலையம் உள்ளது. அதில் தேனி அல்லிநகரத்தைச் சேர்ந்த அருண்குமார்(34) என்பவர் மேலாளராகப் பணிபுரிந்துவந்தார்.
இந்நிலையில் நிறுவனத்தின் தேவைக்காக ரூ.22 லட்சம் பணத்தை வங்கியிலிருந்து எடுத்து வருவதற்காக அருண்குமார் தனது இருசக்கர வாகனத்தில் சென்றதாகக் கூறப்படுகிறது. அருண்குமார் நீண்ட நேரமாகியும் வராததால் நிறுவன உரிமையாளர் தேனி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதனடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், அருண்குமாரின் செல்போன் சிக்னலை வைத்து, தேனி பெரியகுளம் புறவழிச்சாலையில் உள்ள அரசு நிலத்தில் தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததைக் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் வங்கியில் எடுத்து வந்ததாகச் சொல்லப்படும் பணம் இல்லாமல் இருசக்கர வாகனம் மட்டும் அங்கு கிடந்துள்ளது. இதனையடுத்து தேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி, துணைக் கண்காணிப்பாளர் முத்துராஜ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, அருண்குமார் தலையில் சுத்தியலால் பலமாகத் தாக்கப்பட்டு கொல்லப்பட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் சம்பவ இடத்தில் இருந்த தடயங்கள் சேகரிக்கப்பட்டன. அதன்பின்னர் உடற்கூறாய்விற்காக அருண்குமாரின் உடல் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தேனி நகர் காவல் துறையினர், விசாரணை நடத்திவருகின்றனர்.