தேனி: தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்தவர் காட்வின் மேஷாக் என்பவரது மனைவி மகாராணி (42). இவரும், திண்டுக்கல் மாவட்டம், தாலுகா அலுவலகச் சாலையை சேர்ந்த பாபுராஜ் மனைவி டெய்சிராணி (47) என்பவரும் சிறு வயதில் மேகமலையில் பக்கத்து வீடுகளில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு டெய்சிராணி, மகாராணியிடம் அறிமுகமாகி, தற்போது திண்டுக்கல்லில் வசிப்பதாக கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, “திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்த பாதிரியார் எனக்கு தெரியும். அவருக்கு வெளிநாட்டில் இருந்து நிறைய பணம் வந்துள்ளது. ஆனால், அந்த பணத்தை எடுக்க வேண்டும் என்றால், அரசுக்கு வரி செலுத்த வேண்டும். அவ்வாறு வரியைச் செலுத்த பணம் கொடுத்தால், பணம் வந்தவுடன் பல மடங்கு திருப்பி தருவதாக” கூறியுள்ளார். இதனை நம்பி, அவர் கூறிய வங்கிக் கணக்கிற்கு ரூ.2 லட்சத்து 35 ஆயிரம் அனுப்பியுள்ளார், மகாராணி.
இதனையடுத்து, தஞ்சாவூர் மாவட்டம், புதுக்குடி அருகே கீழத்திருவிழாப்பட்டியை சேர்ந்த ராபர்ட் (45) என்பவர் ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் பாதிரியாராக இருப்பதாகவும், அவருக்கும் வெளிநாட்டில் இருந்து பணம் வந்துள்ளதாகவும், அதற்கும் அரசுக்கு வரி செலுத்த ரூ.4 லட்சத்து 80 ஆயிரம் கொடுத்தால், அதை 3 மடங்காக திருப்பிக் கொடுப்பதாக டெய்சிராணி கூறியுள்ளார். அதையும் நம்பி ரூ.4 லட்சத்து 80 ஆயிரம் கொடுத்துள்ளார். மொத்தம் ரூ.7 லட்சத்து 15 ஆயிரம் பெற்றுக் கொண்டு, டெய்சிராணி பணத்தை திருப்பித் தராமல் இருந்துள்ளார்.