தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற விவாதம் தற்போதே எழுந்து விட்டது. அக்கட்சியின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான் என்று அமைச்சர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் சிலர், ஓ. பன்னீர்செல்வம்தான் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் என்று தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டது. இதனால் ஏற்படும் குழப்பத்தை தவிர்க்க அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கூடி சமீபத்தில் ஆலோசனை நடத்தினர். அதன் முடிவில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது தலைமைக் கழகம் முடிவெடுக்கும் என அறிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், "2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்றாவது முறையாக மகத்தான வெற்றி பெறுவது ஒன்றே அதிமுகவின் இலக்கு! அதுவே மாண்புமிகு அம்மா அவர்களின் கனவு. அதனை நனவாக்க கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் அனைவரும் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்பதே எனது அன்பு வேண்டுகோள்" என்று பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், அவரது சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் அவரது ஆதரவாளர்களால் "தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சர் ஐயா ஓபிஎஸ்" என்று அச்சிடப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.