தேனி மாவட்டம் உத்தமபாளையம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் பவித்ரன் (25). இந்து முன்னணி செயற்குழு உறுப்பினரான இவர், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இஸ்லாமியர்கள் குறித்து அவதூறான கருத்துகளைப் பதிவிட்டுள்ளார்.
மேலும் இவரது கருத்திற்கு அஜித்குமார், ராஜா என்பவர்களும் பதில் கருத்துகளைப் பதிவிட்டு விவாதம் செய்துள்ளனர்.
மசூதிகளின் பராமரிப்பிற்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் நிதியுதவித் தொகை ரூ.60 லட்சத்திலிருந்து ரூ.5 கோடியாக உயர்த்தி தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் வெளியான அறிவிப்பு தொடர்பாக அவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். அதில்,
- நீ கொடுத்து பழகிட்ட, அவன் குண்டுவச்சு பழகிட்டான்.
- மனித வெடிகுண்டா மாறணும், கிலோ கணக்கில் வாங்காமல், டன் கணக்கில் வெடிமருந்து வாங்க வேண்டும்
- ஒட்டுமொத்தமா காலி பண்ணணும்
கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர். மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் அமைந்துள்ள இவர்களின் கருத்துகளைக் கண்டித்து உத்தமபாளையம் இஸ்லாமிய கூட்டமைப்பினர் சாலை மறியலில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர்.
இதனையடுத்து, சமூக வலைதளத்தில் கருத்துகள் பதிவிட்ட மூவர் மீதும் உத்தமபாளையம் காவல் துறையினர் நான்கு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து பவித்ரனை கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இதனால் இஸ்லாமியர்களின் சாலை மறியல் கைவிடப்பட்டது.