தேனி மாவட்டம், பெரியகுளத்தில் கட்டப்பட்டுள்ள தேனி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் ஆகியோர் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தனர். இதை தொடர்ந்து தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்தரநாத் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தேனி நாடாளுமன்ற தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக ''24/7 உங்களுடன் நான்'' என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த செயலி வாயிலாக பொதுமக்கள் தங்களது புகார்களை தெரிவிக்கலாம். புகார் குறித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். படிக்காத ஏழை, எளிய மக்கள் தொடர்பு கொள்ளும் வகையில் இலவச தொடர்பு எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் தொடர்பு கொள்ளலாம். 24 மணி நேரமும் வாரத்தின் ஏழு நாட்களிலும் அலுவலகத்தில் தங்களது புகார்களை நேரில் வந்தும் தெரிவிக்கலாம்.
தேனி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மதுரை - போடி அகல ரயில் பாதை இன்னும் ஓராண்டுக்குள் நிறைவு பெற்றுவிடும். இதேபோல் திண்டுக்கல் சபரிமலை ரயில் திட்டத்தை கொண்டு வருவதற்கு நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வருகிறேன். அதேபோல் முல்லைப்பெரியாறு, காவிரி நதிநீர் பங்கீடு உள்ளிட்ட முக்கிய நீராதாரம் பிரச்னைகளை தீர்க்க ஜல்சக்தி அமைப்பிலுள்ள உறுப்பினர்களை நேரில் அழைத்து வந்து தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
தேனி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா மேலும் தமிழர்கள் நன்றி மறந்தவர்கள் என்று பொன் ராதாகிருஷ்ணன் கூறியதாக வெளியான தகவல் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஓபிஆர், மத்திய இணை அமைச்சராக பொன். ராதாகிருஷ்ணன் பதவி வகித்த காலத்தில் பல்வேறு நலத் திட்டங்களை தமிழ்நாட்டுக்கு செயல்படுத்தியவர். தமிழர்கள் நன்றி மறந்தவர்கள் என்று அவர் கூறியிருக்கமாட்டார் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்தி மொழிக்கொள்கை விவகாரத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோரின் நிலைப்பாடே தனது நிலைப்பாடு எனத் தெரிவித்தார்.